• Sun. May 5th, 2024

வழங்காத கடனுக்கு இஎம்ஐ எடுத்த வங்கி மீது வழக்கு பதிவு..!

ByKalamegam Viswanathan

Dec 14, 2023
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்காத கடனுக்கு இஎம்ஐ எடுத்த தனியார் வங்கி மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த காசிநாதனுக்கு மதுரையைச் சேர்ந்த தனியார் வங்கியில் இருந்து கடன் தருவதாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொடர்பு கொண்டனர். அவரும் தான் வைத்திருந்த காரின் பெயரில்  10 லட்ச ரூபாய் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் வங்கி தரப்பில் கடனுக்கான ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகை காசிநாதனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இந்நிலையில் அதற்கு அடுத்த மாதத்தில் இருந்து காசிநாதனின் வங்கிக் கணக்கில் இருந்து இ.எம்.ஐ., தொகை ரூ. 28 ஆயிரம் எடுக்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து வங்கி தரப்பில் கேட்ட போது பணம் பட்டுவாடா செய்யப்படாமல் இருந்தது தெரிய வந்தது. விரைவில் பணம் பட்டுவாடா ஆகும் என வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். 
தொடர்ச்சியாக அடுத்தடுத்த மாதங்கள் காசிநாதன் வங்கி சேமிப்பு கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் இ.எம்.ஐ.,க்கு முந்தைய நாள் இ.எம்.ஐ., தொகையான ரூ. 28ஆயிரத்தை  மேற்படி வங்கியினரே காசிநாதன் சேமிப்பு கணக்கில் செலுத்தி விட்டு மறுநாள் இ.எம்.ஐ., என்ற பெயரில் மேற்படி 28,000-த்தை எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக செய்துள்ளனர்.இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான காசிநாதன் வங்கிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
கொடுக்கப்படாத கடனை ரத்து செய்ய வேண்டும் எனவும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு வேண்டுமென்றும் மதுரை நுகர்வோர் ஆணையத்தில் காசிநாதன் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ராஜேஷ் குமார் டிஜாங்கோ ஆஜராகினார். இதையடுத்து வங்கி தரப்பில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் பிறவி பெருமாள், உறுப்பினர் சண்முகப்பிரியா உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *