• Sun. Apr 28th, 2024

பெரியகுளத்தில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்..!

Byவிஷா

Nov 30, 2023

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 1360 பயனாளிகளுக்கு ரூ.8.84 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, முன்னிலையில் நேற்று (29.11.2023) வழங்கினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து தற்போதுவரை தேனி மாவட்டத்தில் மட்டும் நிலவரித் திட்டத்தின் கீழ் மட்டும் 1,709 வீட்டுமனைப் பட்டாக்களும், 325 நபர்களுக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டாக்களும், 46 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களும் என பல்வேறு விதமான 2,276 பட்டாக்கள் இன்று வரை வழங்கப்பட்டுள்ளது.

வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் வசிக்கின்ற மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் குடியிருப்பு தேவை என்பதை உணர்ந்து, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார்கள். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று தேனி மாவட்டத்தில், பெரியகுளம் கோட்டத்திற்குட்பட்ட தேனி வட்டத்தில் – 380 பட்டாக்களும், பெரியகுளம் வட்டத்தில் – 530 பட்டாக்களும், மற்றும் ஆண்டிபட்டி வட்டத்தில் – 406 பட்டாக்கள் என மொத்தம் 1,316 நபர்களுக்கு இணையவழி (ந-Pயவவய) பட்டாக்களும், ஆட்சேபனையற்ற அரசு நிலத்தில் வசித்துவந்த பெரியகுளம் வட்டத்தை சேர்ந்த 44 நபர்களுக்கு மாற்று இடத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் என மொத்தம் 1,360 பயனாளிகளுக்கு சுமார் ரூ.8.84 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தனக்கு மனநிறைவு அளிக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். அதனைத் தொடர்ந்து, லோயர் கேம்ப் பகுதியில் அரசு கள்ளர் மாணவியர் விடுதியில் 50 மாணவியர்கள் தங்கி கல்வி பயில்வதற்கு ஏதுவாக, உபகரணங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார். மேலும், போடிநாயக்கனூர் தாலுகா, உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திரு.கோபால் என்பவருக்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து வீடு கட்டுவதற்கு ரூ.2.60 இலட்சம் பெறுவதற்கான ஆணையினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *