• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில் 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த 2ந் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 47 இடங்களில் அணி வகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 4ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 6ந் தேதி தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.