• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்தி திணிப்பை கைவிடுக-பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ByA.Tamilselvan

Oct 16, 2022

இந்தி திணிப்பு முயற்சியை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் முதல்வர் கூறியதாவது. இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை, அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இது இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் இது ஏற்புடையதாக இருக்காது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரி சமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.
வளமான மற்றும் பல்வேறுபட்ட கலாச்சாரப் பன்முகத்தன்மையை அந்தந்த தனித்துவமான மொழியியல் சுவைகளுடன் ஊக்குவிப்பது என்பது, இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் ஆகும். இது உலக அரங்கில் பலவித பண்பாடுகள் மற்றும் மொழிகள் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு ஒரு வலுவான எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. ஒரே நாடு என்ற பெயரில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள் பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும்.
அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும் அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் ஒன்றிய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமை வாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.