• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சி..

Byகாயத்ரி

Sep 29, 2022

படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சியாகும் என்று சிவகாசியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணாமலையார் நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார்.

விருதுநகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்ரமணியம், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்புசாமி, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அசன்பதுருதீன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுபாஷினி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிலிப்பாசு, மாவட்ட இளைஞரணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளா்களாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், விஜயபாஸ்கர், ராஜலட்சுமி, கடம்பூர் ராஜு, மாபா பாண்டியராஜன், வைகைச்செல்வன், கோகுல இந்திரா, முன்னால் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா, .அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது,

மிகப்பெரிய மாநாடு போன்று இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை நிருப்பிக்கும் வகையில் இந்த கண்டன பொதுக்கூட்டம் அமைந்துள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும் அத்தனையையும் சாதனைகளாக மாற்றி காண்பிப்பவர் தான் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள். தமிழகத்தில் மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமையும் என்பதற்கு இந்த கண்டன பொதுக்கூட்டமே சாட்சியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, என்னுடைய காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்று அடிக்கடி கூறி வருகின்றார். .திமுக ஆட்சிக்கு வந்து இந்த 16 மாத காலத்தில் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொள்ளும் திமுக இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் என்னுடைய காலத்தில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மெடிக்கல் கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு மெடிக்கல் கல்லூரி வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி என்னிடம் கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து சுமார் 350 கோடியில் விருதுநகரில் மெடிக்கல் கல்லூரியை கட்டிக் கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் தான் விருதுநகரில் மெடிக்கல் கல்லூரி கொண்டுவரப்பட்டது. நாங்கள் கொண்டு வந்து இந்த மெடிக்கல் கல்லூரியில் தனியாருக்கு இணையாக மருத்துவம் செய்யப்பட்டு வருகின்றது. ஆட்சி மாற்றம் காரணமாக விருதுநகர் மெடிக்கல் கல்லூரியை திமுகவினர் திறந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் மேலும் ஏழு சட்டக் கல்லூரிகள் அதிமுக ஆட்சி காலத்தில்தான் புதிதாகக் கொண்டு வந்துள்ளோம். ஏராளமான பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளோம். ஒரு நாடு முன்னேற கல்வி முக்கியம். அந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி, இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை, இப்படி எண்ணற்ற திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் 52 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினியை விலை இல்லாமல் கொடுத்தது தான் அண்ணா திமுக அரசு. இன்று இந்த 52 லட்சம் மாணவர்களின் கல்வித் தரமும் உயர்ந்துள்ளது. கல்வியில் 2030 ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை நாங்கள் 2019 ஆம் ஆண்டு அடைந்து விட்டோம். அதுதான் அண்ணா திமுக ஆட்சி. அதுதான் சாதனை. தற்போது திராவிட மாடல், திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மக்கள் திட்டங்களை அனைத்தையும் நிறுத்திவிட்டனர். மக்கள் நல திட்டங்களை நிறுத்தவதுதான் திராவிட மாடல் ஆட்சியா.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏராளமான வாக்குறுதிகளை ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் கூறினார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவே இல்லை. இதுவே திராவிட மாடல் ஆட்சியாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையேழுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். அவர்கள் ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை நீட் தேர்வு ரத்து செய்து விட்டார்களா. கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணியின்போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போதே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வை நடத்த வேண்டிய சூழ்நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டது. இப்போதும் அதிமுகவின் நிலைப்பாடு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும். படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஏமாற்றுவதே திராவிட மாடல் ஆ்ட்சியாகும். நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சி வழங்கியதால் அரசு பள்ளியில் படித்த 455 மாணவர்கள் மருத்தவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டனர். 110 மாணவர்கள் பல் மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டனர். நீட் தேர்வில் அரசு கல்லூரியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அரசே கல்வி கட்டணத்தை செலுத்தும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. கடந்த 16 மாத திமுக திராவிட மடல் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே திறந்து வைத்து வருகின்றனர். ஒரு அரசாங்கம் மக்களுக்கு எந்த அளவிற்கு திட்டங்களை கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்தது தான் அண்ணா திமுக ஆட்சி. மக்களை எந்த அளவிற்கு ஏமாற்ற முடியுமோ அந்த அளவுக்கு ஏமாற்றி வருவதுதான் திராவிட மாடல் திமுக ஆட்சி. கடந்த அதிமுக ஆட்சியில் எனது தலைமையில் தமிழக முழுவதிலும் 2000 அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தோம். இதில் ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். அம்மா மினி கிளினிக் மூலம் வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் காலத்தில் அம்மா மினி கிளினிக் மூலம் நோயாளிகள் எளிதாக பயடைய முடிந்தது. தற்போது அம்மா மினி கிளினிக்கை அனைத்து மூடிவிட்டனர். தற்போது புதிய, புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வரும் வேளையில் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அம்மா மினி கிளினிக் மூடப்பட்டதால் தமிழகத்தின் புதிய வைரஸ் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கடந்த அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக பொறாமை காரணமாக அம்மா மினி கிளினிக்கை திமுக மூடிவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வேஷ்டி, சேலையுடன் ஊக்கத் தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை நாங்கள் வழங்கினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் தொகுப்புகள் என்று ஒன்று கொடுத்தார்கள். புழுக்கள், பூச்சிகள் நிறைந்த அரிசிகளையும், கரைந்து ஓடும் வெல்லத்தையும் வழங்கினர். எதில் எல்லாம் ஊழல் பண்ண முடியுமோ அதில் எல்லாம் திமுக ஊழல் செய்து வருகின்றது. உங்களுக்கு கொடுத்த பொருட்களில் கூட ஊழலா செய்வது.

கமிஷன்: கலெக்சன்: கரெப்சன் இதுவே இன்றைய திமுகவின் ஆட்சியின் அவல நிலையாக உள்ளது. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்களுக்கு நாங்கள் மிகப் பெரிய பாதுகாப்பாக இருந்தோம். பட்டாசிற்கு பாதிப்பு ஏற்பட்ட போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக தனியாக வழக்கறிஞர் நியமித்து வாதாடி வெற்றி கண்டோம். அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் 20 எம்பிகளுடன் சென்று பட்டாசு தொழிலுக்காக மத்திய மந்திரிகளை பார்த்து உச்சநீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைத்தார். திமுக பொறுப்பேற்று இந்த 16 மாதத்தில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு என்று எந்த முயற்சியையும் திமுக அரசு எடுக்கவில்லை, இதனால் தொழில்கள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளது, பட்டாசு விபத்து ஏற்படும்போது தொழிலாளர்களை பாதுகாக்க சிவகாசியில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தீக்காய சிகிச்சை பிரிவை கொண்டு வந்துள்ளோம். பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பாக தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக பட்டாசு பயிற்சி மையத்தை உருவாக்கியது அண்ணா திமுக அரசாங்கம்தான். சிவகாசியை மாநகராட்சியாக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாங்கள்தான் இந்த சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினோம். திமுக அமைச்சர்கள் மக்களிடம் அநாகரிகமாக பேசியும் நடந்தும் வருகின்றனர். திமுக அமைச்சர் ஒருவர் பெண்களைப் பார்த்து ஓசியில் தானே போகின்றாய் என்று கேவலமாக பேசியது கண்டிக்கத்தக்கது. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் சில்லரை மாற்றிக் கொண்டிருக்கின்றோம் விரைவில் கொடுப்போம் என்று நக்கலாக பதில் கூறியதும் கண்டனத்துக்குரியது. மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் இந்து மக்களை மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். குறிப்பிட்ட சமுதாய மக்களை, மதத்தினரே இழிவு படுத்துவது கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுக் கட்சியிலிருந்து திமுகாவிற்கு வந்தவர்கள் விபச்சாரிகள் என்று ஒரு அமைச்சர் கூறுகின்றார். ஒரு பொதுக்கூட்ட மேடையில் ஒரு அமைச்சர் பேசும்போது, குற்றவாளியை நிரபராதி ஆக்குவதும் நிரபராதியை குற்றவாளியாக்குவதும் எங்களது கையில் தான் இருக்கின்றது என்று கூறுகின்றார். திமுக அமைச்சர்களை தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எங்களது அண்ணா திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒரு மதத்தையோ, சமூகத்தையோ சமுதாய மக்களையோ புண்படுத்தும் நோக்கில் அண்ணா திமுக தலைவர்களோ தொண்டர்களோ பேசியது கிடையாது. ஏஎம், பிஎம் என்று ஸ்டாலின் உளறுகின்றார். ஏஎம், பிஎம் என்பது சிவகாசியில் வாழக்கூடிய தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கூட பிரச்சனையில் திமுக அரசு உரிய நேரத்தில் தீர்வை ஏற்படுத்தாததால் பெரிய கலவரமாக மாறியது. இதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி பிரச்சனையில் பள்ளி மாணவர்களும், பள்ளியின் பெற்றோர்களும், பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திவர்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஒரு பொம்மை முதல்வர் போன்று ஸ்டாலின் ஆட்சி செய்து வருகின்றார். தமிழகம் போதைப் பொருளின் சொர்க்க பூமியாக திகழ்கின்றது. மற்ற மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் தமிழகத்திற்கு வருகின்றது என்று அமைச்சர்கள் கூறுவதை ஏற்க முடியாது. போதை பொருள் கொண்டு வந்தாலும் போதை பொருளை விற்பனை செய்தாலும் கட்டுப்படுத்துவது தமிழக அரசின் கடமையாகும். போதை பொருளை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டாலின் திணறி வருகின்றார். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக தமிழக அமைச்சரவை கூட்டி ஆன்லைன் சூதாட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தடை விதித்துள்ளார். இந்த சட்டத்தையும் எப்போது நடைமுறைப்படுத்துவார்களா என்று தெரியவில்லை.

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தாமல் அண்ணா திமுகவே அளிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார். ஸ்டாலின் நினைப்பது ஒரு காலமும் நடக்காது. ஒரு அண்ணா திமுக தொண்டனை கூட ஸ்டாலினால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அண்ணா திமுகவில் உழைப்பவர்கள் என்றும் உயர்ந்து கொண்டே இருப்பார்கள். உழைப்பவர்களுக்கு அண்ணா திமுகவில் உரிய மரியாதை உண்டு. திமுகவில் பிழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை உண்டு. பதவிகள் கொடுப்பார்கள்.

தமிழக மக்களுக்கு மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு என இரண்டு போனஸ்களை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். 12 சதவீதமாக இருந்த மின்கட்டணத்தை 53 சதவீதமாக திமுக அரசு உயர்த்தியுள்ளது. கரண்ட் பில்லை கடுமையாக உயர்த்தி விட்டனர். கரண்டை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதெல்லாம் தாண்டி கரண்ட் பில்லை கேட்டாலே ஷாக்கடிக்க கூடிய நிலையில் மின்கட்டணம் உள்ளது. இதுதான் திராவிட மாடலாட்சியாகவும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தில் மின் உபரி மாநிலமாக வைத்திருந்தோம். எங்கும் மின்வெட்டே கிடையாது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தது முதலே தொடர்ந்து மின்வெட்டு உள்ளது. சொத்து வரியை 100% உயர்த்திவிட்டனர். இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு மளிகை கடையில் வாங்கிய மளிகை பொருட்களுக்கும் தற்போதுள்ள திமுக ஆட்சியில் வாங்கும் மளிகை பொருட்களுக்கும் வித்தியாசத்தை பார்த்தால் 30 சதவீதம் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறினர். எதையும் குறைக்க மறுக்கின்றனர். கூட்டுறவு சொசைட்டில் வைக்கப்படும் நகைகள் அனைத்தும் தள்ளுபடி செய்வோம் என்று கூறினார். நேஷனல் வங்கியில் வைக்கப்பட்ட நகைக்கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று கூறினார். நேஷனல் வங்கியில் வாங்கப்பட்ட கல்வி கட்டணத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று கூறினர். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்று கூறினர். இப்படி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி திமுக ஆட்சியை பிடித்தனர். இதுவே திராவிட மாடல் ஆட்சியாகும்.

தமிழக மக்களை ஏமாற்றியதுதான் திராவிட மாடல் ஆட்சியாகும். கடந்த அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை வாங்கிய ஏராளமான நபர்களுக்கு முதியோர் உதவி தொகை கொடுப்பதை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதனால் வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கைத் தரத்தை இழந்து நிற்கின்றனர்.. தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு கவர்ச்சி திட்டங்களை தேர்தல் அறிக்கையாக திமுக கொடுத்தது. பழைய ஓய்வு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறினார். திமுக அரசு ஏமாற்றுகிறதே தவிர எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முயற்சிக்கவில்லை. படிக்காதவர்களையும் படித்தவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாட்ல் ஆட்சியாகும். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு ஒரு குழுவை அமைக்கின்றார். இப்படி 38 குழுக்கள் இதுவரை அமைத்துள்ளார். இந்த குழுவினால் எந்த ஒரு நன்மையும் ஏற்பட்டதில்லை. இதற்கு சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியது ஞாபகம் வருகின்றது. எந்த ஒரு திட்டத்திற்கும் குழு அமைத்தால் அந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடலாம் என்று துரைமுருகன் சொன்னது மீண்டும் அனைவருக்கும் ஞாபகம் வருகின்றது. அதைத்தான் தற்போதைய திமுக திராவிட மாடல் ஆட்சி செய்கின்றது. திமுக ஆட்சியை திராவிட மடல் ஆட்சியை தற்போது காப்பாற்றி வருவது பத்திரிகை, ஊடகத்துறை மட்டும்தான். செய்தி வெளியிடும்போது நடுநிலைமையோடு வெளியிட வேண்டும். பத்திரிகை, ஊடக நண்பர்கள் திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். விவாத மேடை என்று நடத்தி அதில் பல உண்மைகளை மறைக்கின்றனர். சமூக வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் இதே நிலைமையில் நீங்கள் சென்றால் உங்கள் மீதான் நம்பிக்கைதன்மை குறைந்து விடும். எப்போது தேர்தல் வந்தாலும் தமிழக மக்கள் அண்ணா திமுகவிற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில்தான் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எடப்பாடியார் ஆட்சி காலத்தில் விருதுநகரில் மெடிக்கல் கல்லூரியில் கொண்டுவரப்பட்டது. சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அரசு கலைக் கல்லூரியை கொடுத்தது அண்ணா திமுக அரசாங்கம். விருதுநகர் மாவட்டத்தில் 68 மினி கிளினிக்குகளை கொடுத்தது எடப்பாடியார் அரசாகும். தமிழக முழுவதிலும் 2000 மினி கிளினிக்குகளை எடப்பாடியார் திறந்து வைத்தார்கள். இதில் விருதுநகர் மாவட்டத்தில் 68 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. அத்தனையும் தற்போது திமுகவினர் மூடிவிட்டனர். இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிமுக ஆட்சியை இழந்த போதிலும் அதிமுக தொண்டர்கள் தெம்பாக இருக்கின்றனர். ஒரு சமுதாயத்திற்கு எதிராக எடப்பாடியார் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் தோற்றுவிக்க நினைத்தனர். ஆனால் அனைத்து சமுதாயத்தின் தலைவனாக, பாதுகாவலனாக தான் எடப்பாடியார் திகழ்கின்றார். இந்த கண்டன பொதுக் கூட்டத்திற்கு முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு சமுதாயத்தினர், முத்தரையர் சமுதாயத்தினர், இஸ்லாமிய சகோதரர், கிறிஸ்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து எடப்பாடியாரை வரவேற்றுள்ளனர். அனைத்து சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடியார் திகழ்கின்றார். எடப்பாடியார் ஆட்சியில் தான் எல்லாம் கிடைத்தது.

எல்லா விலையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தற்போது எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது. விளம்பரத்தால் நடைபெறும் ஆட்சியாகவே திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பட்டாசு, தீப்பெட்டி அச்சுத் தொழிலுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு இருந்தது. அனைத்து தொழிலுக்கும் பாதுகாவலனாக நான் இருந்தேன். பட்டாசுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது அப்போதே முதல்வர் எடப்பாடியாரிடம் கூறி உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்கறிஞர் நியமித்து பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு கொடுத்தோம். பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார். நாட்டு மக்களுக்காக உழைக்கக் கூடியவர் எடப்பாடியார். எங்களை எல்லாம் தட்டிக் கொடுத்து வளர்த்தவர். பாட்டுப்பாடியே பெயர் வாங்கியவர்கள் அண்ணா திமுக தொண்டர்கள். குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் தான் திமுகவினர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் தான் எல்லா சாலைகளும் புதிதாக போடப்பட்டுள்ளன. கிராம சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டன. பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் சாலைகள் போடப்பட்டன. ஏராளமான பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். ஏராளமான பள்ளிகளை தரம் உயர்த்தி கொடுத்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்தின் அத்தனை தொழிலுக்கும் பாதுகாப்பாக திகழ்ந்தவர் எடப்பாடியார். எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் கையை வலுப்படுத்தும் வகையில் வாக்காளர்கள் தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக அதிமுக பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி செங்கோல் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினார். முன்னதாக அதிமுக பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருவி்ல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், திருத்தங்கல் மேற்கு பகுதி கழகச் செயலாளர் சரவணகுமார், கிழக்கு பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர். வெங்கடேஷ், சிவகாசி மேற்கு பகுதி கழகச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி கிழக்கு பகுதி கழகச் செயலாளர் சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, திருத்தங்கல் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, சிவகாசி மாமன்ற உறுப்பினர்கள் கரைமுருகன், சாந்தி சரவணகுமார், மாவட்ட கழக அவை தலைவர் விஜயகுமார், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர். கிருஷ்ணராஜ், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் மணிகண்டன், மாணவரணி அஜய் கிருஷ்ணா, விருதுநகர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராசா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், ராஜபாளையம் நகரக் கழக செயலாளர்கள் துரைமுருகேசன், பரமசிவம், விருதுநகர் நகர கழக செயலாளர் முகமது நயினார், மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜேஷ்குமார், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் அங்கு துரைபாண்டியன், சேத்தூர் நகர கழகச் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், வத்திராயிருப்பு பேரூர் கழகச் செயலாளர் வைகுண்ட மூர்த்தி, எஸ்.கொடிக்குளம் பேரூரர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, சுந்தரபாண்டியன் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, அம்மா பேரவை இணைச் செயலாளர் சேதுராமானுஜம், திரைப்பட நடிகர் பிரபாத், அண்ணா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட கழக துணைச் செயலாளர் அழகுராணி, தலைமைக் கழக பேச்சாளர் சின்னத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர் அருணா நாகசுப்பிரமணியன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் முத்தையா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சேதுராமன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்கள் மாரிஷ்குமார், ஆனந்தகுமார், அண்ணா தொழிற்சங்க கவுரவத் தலைவர் குருசாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருமுருகன், திருத்தங்கல் முன்னாள் நகரக் கழக செயலாளர் முருகேசன், விருதுநகர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் ஜெயப்பெருமாள், கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ராஜேஸ்வரி வாசுதேவன், மாவட்ட துணை செயலாளர் இந்திரா கண்ணன், மாவட்ட பொருளாளர் குருசாமி, சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை எஸ்.சி.சுப்பிரமணியன், வெம்பக்கோட்டை ஒன்றிய குழு துணை தலைவர் ராமராஜ் பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மச்சேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட மாணவரணி செயலாளர் வேங்கை மார்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராமநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமிபாண்டியன், காரியாபட்டி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், தோப்பூர் முருகன், நரிக்குடி ஒன்றிய கழக செயலாளர்கள் ரவிச்சந்திரன், பூமிநாதன், திருச்சுழி ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, அருப்புக்கோட்டை ஒன்றிய கழகச் செயலாளர்கள் வாசுதேவன், சங்கரலிங்கம், சாத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தேவதுரை, சண்முகக்கனி, திருச்சுழி நகர கழக செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆவியூர்குமார், அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், சாத்தூர் நகர கழக செயலாளர் எம்.எஸ்.கே.இளங்கோவன், காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் விஜயன், மல்லாங்கிணறு பேரூர் கழக செயலாளர் அழகர்சாமி உட்பட கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள் சிவா, கணேஷ்பாண்டியன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் முத்துராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கூடலிங்கபாண்டியன், சிவகாசி தெற்கு ஒன்றிய கழகப் பொருளாளர் தங்கமுனியாண்டி, திருத்தங்கல் மாணவரணி முத்துக்குமார் நன்றி கூறினர். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.