• Mon. Apr 29th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 29, 2022

நற்றிணைப் பாடல் 29:

நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி
யாங்கு வல்லுநள்கொல்தானே- யான், ‘தன்
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!’ என
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ,
வெய்ய உயிர்க்கும் சாயல்,
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே?

பாடியவர் பூதனார்
திணை பாலை

பொருள்:
“நீண்ட வெயில் காலத்தில், வாடிய காந்தள் பூக்கள் இருக்கிற, வெப்பமாக இருக்கும் நீண்ட பாதையில், ஒதுங்க நிழலில்லாமல், குட்டிகளைப் பெற்ற பெண்புலி
பசியால் வாடி மயங்கிய மாலை வேளையில், அந்த வழியில் போவோரைக் கொல்வதற்காக ஆண்புலி மறைந்துகிடக்கும் புல்லும் புதரும் இருக்கும் சிறிய வழியை எப்படி அவள் கையாளுவாள்? வள்ளி(தொய்யில்) வரைந்த இளமையான மார்பு வலிக்குமோ என்று நினைத்து அவளை அணைத்திருந்த என் கையைத் தளரவிட்டதற்கே அவளின் பெரிய ஈர விழிகள் அமைதியாக அழுதன! வெப்பமான பெருமூச்சு விடுவாள்! கரிய மென்மையான கூந்தலையுடைய உன்னதமான அப்பாவி அவள்!” என்று தலைவனுடன் தலைவி சென்றுவிடத் தாய் தன் மகளை நினைத்துக் கூறுகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *