• Mon. Apr 29th, 2024

திருமாவளவனை அடக்க நினைக்கிறாரா ஸ்டாலின்..?

Byadmin

Sep 26, 2021

“கல்லெடுத்து வீசக்கூடிய தம்பிகள் ஒருநாள் பூவெடுத்து வீசும் காலம் வரும். எந்த இடத்தில கொடியேத்த முடியலையோ, அதே இடத்துல இன்றைக்கு சோடா பாட்டில் வீசிய தம்பியே! இந்தச் சிறுத்தைகளின் கட்சிக் கொடியை ஏற்றும் நிலை வரும்” என்று உரத்த குரலில் பேசி தி.மு.க அரசுக்கு எதிராக சேலத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்திருப்பதுதான் கூட்டணிக் கட்;சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் அமைந்துள்ளது கே.மோரூர் என்ற கிராமம். இந்த கிராம பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பம் நடுவதற்கு, அக்கட்சி சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு காவல்துறையும், வருவாய்த் துறையும் அனுமதி மறுக்கவே ஏன் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியை மோரூரில் வைக்க விட மாட்டேங்கறீங்க? என்ற சர்ச்சையான கேள்விகள் எழுந்ததுதான் இப் பிரச்சினைக்கான மூல காரணமே.

ஏற்கெனவே அங்கு திமுக, அதிமுக கொடிக் கம்பங்கள் இருப்பதால், இடையூறு ஏற்படுவதாகவும், இனி அப்பகுதியில் கொடிக்கம்பங்களே நடக்கூடாது என 2 ஆண்டுகளுக்கு முன்பே மோரூர் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், அது காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் கடிதமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு துறைகளும் விசிக கட்சியினரிடம் சொல்ல. அங்கெல்லாம் அதிமுக கொடியும் திமுக கொடி பறக்குதுல்ல, வி.சி.க கொடிக்கம்பம் பறக்குறதுல இவங்களுக்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை.

எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என வி.சி.க தரப்பில் இருந்து கேள்விக்கனைகள் பாய, தங்களின் கொடியையும் பறக்கவிட அனுமதி வழங்கிய ஆகவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு இரண்டு துறைகளும் முடியவே முடியாது என்று மறுக்கவே, எங்கள் உரிமையை நீங்கள் பறிக்கக் கூடாது என்று நாங்கள் கொடிக்கம்பத்தை நடுகிறோம் என்றும், கொடிக்கம்பத்தை நடுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள் வி.சி.க. தரப்பினர்.

இது என்னடா வம்பா போச்சு! என்று காவல்துறையினர் தடுக்கவே, பெரிய போராட்டம் நடைபெற்று தடியடி வரைக்கும் நடத்தியிருக்கின்றனர் காவல்துறையினர்.

15க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்குச் செல்ல, மிகவும் ஆதங்கத்தோடு தன் பதிவை டுவிட்டர் பக்கத்தில்,
பொது இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது, சேலம் மாவட்டம் மோரூரில் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற அங்கிருந்த சில சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு துணை போகும் வகையில் அங்கிருந்த காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடியேற்ற தடை விதித்ததுடன், எனது கட்சி தொண்டர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். விசிக கொடி ஏற்ற தடை விதித்து சட்டம் ஒழுங்கை சிக்கலாக்கியதுடன், விசிக தொண்டர்கள் மீது தடியடி நடத்தி சாதிவெறியர்களுக்கு துணைபோன, காவல்துறையின் தலித் விரோத போக்கை கண்டித்து வரும்


29-9-2021 புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து விட்டதோடு மட்டுமல்லாமல், “கொள்கை வெல்லக் களமாடுவோம்! – ஆளும் கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்! மதுரையில் கடந்த 2015ல் நடந்த விசக ‘வின் வெள்ளிவிழா மாநாட்டில் உரத்து முழங்கிய சிறுத்தைகளின் கொள்கை முழக்கம்.” என்றும் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு டுவிட்டையும் பதியவிட்டுள்ளார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசபடுத்தும் அரசியல்படுத்தும்..

ஒரு போதும் அச்சப்படுத்தாது என எழுதப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையிலும், கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை விடுவிக்குமாறு காவல் உயரதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏவிடம் பேசியும் பலனில்லை என்று தனது ஆதங்கத்தை நேற்று அவர் பதிவு செய்திருந்த நிலையில் இந்த போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விசிக – திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி ஆளும் கட்சியை எதிர்த்து கோட்டையில் கொடியேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளது தி.மு.க வினரை கோபப்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு மேடை நிகழ்ச்சியில் பகிரங்கமான தனது பேச்சை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த மேடைப்பேச்சில் திருமாவளவன்..,
சேலம் மாவட்டத்தில் உள்ள மோரூர் பேருந்து நிலையத்தில் எல்லாக் கட்சிக் கொடியும் பறக்கிறது, சாதி சங்கக் கொடியும் பறக்குது. அங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவதற்கு கடந்த 10 நாட்களாக அவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து வருகிறது. காவல்துறையினர் கொடியை ஏற்ற வேண்டாம் என்று தடுக்கிறது.

எல்லாக் கட்சிக் கொடியும் பறக்கிறப்ப, எங்க கட்சிக் கொடி மட்டும் ஏன் பறக்கக் கூடாது என்று கேட்டால், இல்ல புதுசா கொடி ஏத்தக்கூடாது என்று கூறுகின்றனர். புதுசா கொடி ஏத்தக்கூடாதுன்னு சொன்னா, அப்ப புதுசா யாரும் கட்சி தொடங்கக் கூடாதுன்னுதானே அர்த்தம். எல்லாரும் ஏற்கெனவே இருந்த இடத்துல தான் கொடி ஏத்தனும்னு சொன்னா, அப்புறம் எப்படி கட்சியை வளர்க்க முடியும். எந்த ஊருல போயி புதுசா நாம கொடியை ஏத்த முடியும்.

அதற்குப்பிறகு நீங்க சொல்றது தப்புன்னு சொன்னா, இல்ல நாங்க எல்லாக் கொடியையும் எடுக்கப் போறோம்னு சொல்றாங்க. எப்ப கொடியை எடுப்பீங்கன்னு கேட்டா 10 நாளில் எடுத்துவிடுவோம் என்று சொல்றாங்க. சரி, 10 நாளில் எடுக்கும் போது எங்க கொடியையும் சேர்த்து எடுத்துருங்கன்னு நம்ம கட்சி மாவட்டச் செயலாளர் சொல்கிறார்.

இது கொடியேற்றுவதற்கான உரிமை. ஆனால், காவல்துறையும் சரி, அதிகார வர்க்கமும் சரி, சாதிய வாதிகளும் சரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றவதற்கு தடை விதித்து, தடியடி நடத்தி பலபேருடைய மண்டைகள் இன்றைக்கு உடைந்திருக்கிறது. நான்தான் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது அனைத்தையும் நிறுத்தி விடுங்கள், அந்த பேருந்து நிலையத்திற்குப் போக வேண்டாம் என்று கூறினேன்.

அங்க கொடி ஏத்திதான் கோட்டையில் ஏத்தப் போறது கிடையாது. நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஒரு காலத்துல, 20 வருடத்திற்கு முன்னால் நான் சொன்னேன். “கல்லெடுத்து வீசக்கூடிய தம்பிகள் ஒருநாள் பூவெடுத்து வீசும் காலம் வரும். எந்த இடத்தில கொடியேத்த முடியலையோ, அதே இடத்துல இன்றைக்கு சோடா பாட்டில் வீசிய தம்பியே! இந்தச் சிறுத்தைகளின் கட்சிக் கொடியை ஏற்றும் நிலை வரும்” என்று உரத்த குரலில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைக் கட்சியினுடைய மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்..,
தி.மு.க அரசு எங்க அண்ணன் திருமாவளவனை அடக்க நினைக்கிறாங்களா? நாங்க நியாயத்துக்குத்தான போராடுறோம். ஏன் எங்க கட்சிக் கொடிய அங்க பறக்க விட்டா என்ன தப்பு. எல்லாக் கொடியையும் அகற்றும் போது எங்க கொடியை அகற்றிடுங்க. அதுவரைக்கும் எங்க கொடியும் கம்பீரமா பறக்கட்டுமே! இந்தப் பிரச்சனையை பற்றி எங்க கூட்டணி கட்சியில் உள்ள தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட எந்த ஒரு கட்சியும் இதுவரை எதிர்த்துக் குரல் கொடுக்கலையேன்னு வேதனையா இருக்கு. ஒரு கண்ணுல வெண்ணையும், ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வச்சா நாங்க சும்மாலாம் இருக்க மாட்டோம் என்று கூறியதோடு, இந்தப் பிரச்சனைக்கு முடிவு எங்க அண்ணன் 29ஆம் தேதி சேலம் மண்ணுல காலை வச்சு ஆர்ப்பாட்டம் நடத்தும் போது தெரியும் என்றார்கள் ஒட்டுமொத்தமாக.

எது எப்படியோ தி.மு.க கூட்டணியில் கரும்புள்ளி விழுந்து விட்டது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *