• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Aug 14, 2022

நற்றிணைப் பாடல் 15:
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு,
நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே!

பாடியவர் அறிவுடைநம்பி
திணை நெய்தல்
பொருள்:
தோழி, தலைவனிடம் கூறுகிறாள்:
“ஓலமிடும் அலைகள் ஒன்று சேர்த்த பெரிய மணல்மேட்டை, மெல்லிய ஆடையின் அசைவு போன்று, கூட்டமாக வந்த வாடைக் காற்று தூக்கியடிக்கும் கடற்கரையைச் சேர்ந்த தலைவனே, பூப்போன்ற எங்கள்(தலைவியின்) நலத்தை அனுபவித்தாய். அதை நீ உணரவில்லை. அந்த வருத்தத்தை நாங்கள் தாங்கினோம். கற்புடைய பெண்ணின் குழந்தையைப் பேய் கவர்ந்துபோகவிட்டதைப் போல, நீண்டகாலம் எங்களுடன் இருந்த வெட்கத்தைக் கைவிட்டவர்களானோம். இனி இந்த ஊர் நம்மைப் பற்றிப் புறம் பேசும்.” தலைவியைத் திருமணம் செய்யத் தலைவன் தயங்கி நாள் கடத்தியபோது, தோழி அவனை விரைவில் திருமணம் செய்யத் தூண்டுகிறாள்.
“தலைவனே! அலைகள் ஒன்று சேர்த்த மணல் மேட்டை, வாடைக் காற்று சிதைத்ததைப் போல, எங்களுடைய ஒழுக்கத்தால் ஒன்று சேர்த்த வெட்கத்தை(நாணம்)ச் சிதைத்தாய். எம் நலம் பூப்போன்றது. அதனை நுகர்ந்தாய். ஆனாலும் அதுபற்றிய நினைப்பில்லை. கற்புடைய பெண்ணின் குழந்தையைப் பேய் கவர்ந்தது போன்று, எங்கள் நாணத்தைக் கவர்ந்தாய். இனி நீ விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்.”