• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மக்களை காத்த முத்துலட்சுமி ரெட்டி…

ByAlaguraja Palanichamy

Aug 6, 2022

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமசுத்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்தவர்.

கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இவர் விண்ணப்பித்தார்.பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள்.’ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது’ என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.

புதுக்கோட்டை மன்னரான பைரவத் தொண்டைமானுக்கு இந்த செய்தி எட்ட… அவரின் ஆணையால், முதல் பெண் மாணவியாக நுழைந்தார் முத்துலட்சுமி. அங்கேயும் அசத்தினார்.Madras Medical College-ல் இடம் கிடைத்தது. அங்கே பெண்களுக்கு என்று தனி விடுதி இல்லை. தெரிந்தவரின் வீட்டில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல்.ஆண் மருத்துவ மாணவர்கள் சீண்டல்களில் ஈடுபட்டார்கள். வகுப்பிற்கு வீட்டில் இருந்து வருகையில் திரை போட்ட வாகனத்திலேயே வருவார்.

‘போயும், போயும் பெண்ணெல்லாம் படிக்கப் போகிறாள்’ என்றெல்லாம் வசைபாடுவது மக்களின் வழக்கமாக இருந்தது.‘என் வகுப்பிற்குள் ஒரு பெண் நுழையக்கூடாது’ எனக் கர்னல் ஜிப்போர்ட் கர்ஜித்தார்.முத்துலட்சுமி வகுப்பிற்குள் நுழையவில்லை. தேர்வு முடிவுகள் வந்தன.

முத்துலட்சுமி கண்டிப்பிற்கும், கச்சிதத்திற்கும் பெயர் பெற்ற ஜிப்போர்ட்டின் அறுவை சிகிச்சை தாளில் முதல் மதிப்பெண்ணைப் பெற்று இருந்தார்.அதற்குப் பிறகே முத்துலட்சுமியை தன்னுடைய வகுப்பில் அவர் அனுமதித்தார். முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்ற தருணத்தை , ‘இந்தக் கல்லூரி வரலாற்றின் பொன்னாள்’ என்று சிலிர்த்து ஜிப்போர்ட் எழுதினார்.1927-1930 காலத்தில் சட்டசபையில் நுழைந்தார். அப்படி நுழைந்த காலத்தில் துணைத் தலைவராகவும் இயங்கினார். பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், பால்ய விவாகத் தடை சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் முதலிய பல்வேறு சட்டங்கள் அவரின் முயற்சியால் இயற்றப்பட்டன.குறிப்பாகத் தேவதாசி முறை ஒழிப்புக்காகத் தீவிரமாக இயங்கினார். அதற்குக் காந்தி, பெரியார் எனப் பல்வேறு தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகியது.

சத்தியமூர்த்தி “கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க, கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை.தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது.சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள்.

அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.முத்துலட்சுமி “உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?” என்று கேட்டதோடு சத்தியமூர்த்திப் பேயறைந்து அமர்ந்துவிட்டார்.பாரீஸ் வரை சென்று பெண்களின் உரிமை சார்ந்த குரலை முத்துலட்சுமி எழுப்பினார். திருமணமே வேண்டாம் என்று இருந்தவர் சுந்தர ரெட்டியை மணந்து கொள்ளச் சம்மதித்தார்.‘திருமண உறவில் இருவரும் சமமானவர்கள். என்னுடைய விருப்பங்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது.’ போன்ற விதிகளைச் சுந்தர ரெட்டி ஏற்ற பின்னே திருமணம் செய்து கொண்டார். சடங்குகள் இல்லாத திருமணமாக அது அமைந்தது.

தேவதாசி முறையைச் சட்டம் இயற்றி மட்டுமே ஒழித்துவிட முடியாது என்கிற தெளிவு முத்துலட்சுமி அவர்களுக்கு இருந்தது.தேவதாசி முறை ஒழிப்பால் ஆதரவற்றுப் போன பெண்களுக்கு என்று அடைக்கலம் தர இரண்டு இல்லங்களே சென்னையில் இருந்தன.ஒன்று பிராமணப் பெண்களுக்கு மட்டுமானது. இன்னொன்று பிராமணர் அல்லாதவர்களுக்கு உரியது.நள்ளிரவில் அவரின் வீட்டு கதவை மூன்று இளம்பெண்கள் தட்டி அடைக்கலம் கேட்டார்கள். தான் பொறுப்பில் இருந்த அரசு மருத்துவமனையின் கீழ்வரும் விடுதியின் பொறுப்பாளரை பார்க்க சொல்லி அனுப்பினார். அந்தப் பெண்களின் குலத்தின் பெயரை சொல்லியும், அவர்களின் பண்புகளைக் கேவலப்படுத்தும் வகையிலும் வசைபாடல்களை நள்ளிரவில் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.

கண்ணீரோடு முத்துலட்சுமி அவர்களின் வீட்டுக்கதவை தட்டினார்கள். அந்தக் கணமே தன்னுடைய வீட்டையே பெண்களுக்கான ஆதரவு இல்லமாக மாற்றினார்.சில காலத்துக்குப் பிறகு ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக என்று ‘அவ்வை இல்லத்தை’ உருவாக்கினார். அவரிடம் அடைக்கலமான அந்த மூன்று பெண்களும் மருத்துவர், ஆசிரியர், செவிலியர் என்று சாதித்துக் காட்டினார்கள். அவ்வை இல்லத்தின் பெண்களின் கல்வியை முத்துலட்சுமி தானே கவனித்துக் கொண்டார். தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போதே புற்றுநோய்க்கு என்று தனியான ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். தன்னுடைய தங்கையைப் புற்றுநோய்க்கு இளம் வயதிலேயே இழந்ததன் வலி அது. சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் புற்றுநோய் சிகிச்சை தர வேண்டும் என்று கனவு கண்டார்.

இலவசமாகச் சேவை செய்ய வேண்டும் என்று அவர் தன்னுடைய கனவை விளக்கினார். விடுதலைக்குப் பிறகு அப்போதிருந்த மருத்துவ அமைச்சரிடம் உதவி கேட்டார்.“ஏன் மக்கள் புற்றுநோயால் மட்டும் தான் இறக்கிறார்களா?” என்று துடுக்காகப் பதில் வந்தது. சுகாதாரச் செயலாளர் , ‘உங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால்…’ என்று பீடிகை போட்டு இந்த மாதிரி திட்டமெல்லாம் தேறாது என்று எழுதியிருந்தார். அமெரிக்காவில் போய் மேற்படிப்பு படித்துவிட்டு வந்திருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார். அவரோடு அரசு மருத்துவ வேலையைத் துறந்திருந்த சாந்தாவும் இணைந்து கொண்டார்.

அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கான அடித்தளம் போடப்பட்டது. பெரிதாகக் கையில் பணம் இல்லை என்றாலும், மக்களின் உயிர் காக்க ஓடி, ஓடி நிதி திரட்டினார். எளிய இடத்தில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை 12 படுக்கைகளோடு எழுந்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட ஐநூறு படுக்கைகளோடு வருடத்திற்கு இரண்டு லட்சம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக அவரின் விதை, விழுதுகள் பரப்பி விரிந்துள்ளது. அரசியல் களத்தில் அயராது இயங்கிய முத்துலட்சுமி தன்னுடைய மருத்துவர் பணியை விட்டுவிடவில்லை. மருத்துவத்தைப் பொருளீட்டும் முதலீடாகப் பார்க்காமல் எளியவர்கள் குறித்த கரிசனத்தோடு இயங்கினார். பொது வாழ்க்கையில் மூழ்கி குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கவில்லை. அவருடைய தங்கை நல்லமுத்துவை தன்னுடைய செலவிலேயே படிக்க வைத்தார்.

அவர் ராணி மேரி கல்லூரியின் முதல் இந்திய முதல்வராகப் பொறுப்பேற்று சாதித்தார். புதுக்கோட்டையில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிப் புத்துலகை படைத்தார் முத்துலட்சுமி ரெட்டி.