• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Aug 6, 2022

நற்றிணைப் பாடல் 8:
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள் கொல் இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே.

பாடியவர் பாடியவர் பெயர் கிடைக்கவில்லை
திணை குறிஞ்சி
துறை தலைவன் சொன்னது

பொருள்:
எப்போதும் துன்புறுத்தும் செவ்வரியோடிய செழித்த குளிர் கண்கள்; பல்வகைப் பூக்கள் மாறுபடத் தொடுத்த தழையுடை அணிந்த மறைவிடம்; இவள் மேனியோ அழகான நீலமணி போன்றது. இம்மடப்பெண் யாருடைய மகள்! இவள் தந்தை வாழ்க! என்னை இன்பத் துயரம் அடையச் செய்தாள்! வலிய தேருடைய சேர மன்னன் பொறையனின் தொண்டி என்னும் ஊரிது! இங்கு அகன்ற வயல்களில் பெண்களின் கண்கள் போலப் பூக்கும் நெய்தலின் தண்டுகளைச் சேர்த்துக் கட்டிச் சேர்ப்பவர் சிலர்; கண்களைப் போல நெய்தற் பூக்கள் இக்கதிர்ப் போரில் பூக்கும்; இவ்வூரைப்போல எல்லா வளமும் இவளைப் பெற்ற தாயும் பெறுவாளாக!