• Tue. Apr 30th, 2024

போலீஸ் கெட்டப்பில் அரிசி வழிப்பறி செய்த ஆசாமி..!

போலீஸ் போல நடித்து நகை பறித்துச் சென்றார், போலீஸ் போல நடித்து பணம் பறித்துச் சென்றார், ஏன்… போலீஸ் போல நடித்து வாகனத்தை எடுத்துச் சென்றார்கள் என்று பல்வேறு செய்திகளை நாம் பார்த்து இருக்கிறோம், படித்தும் இருக்கிறோம். மாறி வரும் நவீன காலத்துக்கு ஏற்ப, தற்போது போலீஸ் மீதுள்ள பயத்தில் திருடர்கள் ஓடி ஒழியும் காலமெல்லாம் மலையேறி விட்டது. போலீஸ் பெயரில் கொள்ளையடிக்கும் காலம் இது. அது தான் தங்களுக்கு பாதுகாப்பு என நினைத்து கொள்ளையடிப்பவர்களும் உண்டு. ஆனால், போலீஸ் பெயரைச் சொல்லி அரிசியை கூடவா கொள்ளையடித்துச் செல்வார்கள். அதுவும் தலைநகர் சென்னையில்தான் இந்த கூத்து நடந்திருக்கிறது.

சென்னை வடபழனியில் உள்ள தனது மகன் ராமச்சந்திரன் என்பவர் வீட்டிற்கு அவரது தந்தை மாரிமுத்து என்பவர் மதுராந்தகத்தில் இருந்து வந்துள்ளார். பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு, மீண்டும் ஊருக்குச் செல்கிறேன் என்று தனது மகனிடம் கூறியுள்ளார். தந்தைக்கு செலவுக்கு பணம் கொடுத்த ராமச்சந்திரன், அவருக்கு வீட்டில் இருந்த 15 கிலோ அரிசியை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அவரும் ஒரு பையில் அந்த அரிசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். மதுராந்தகம் செல்வதற்காக சென்னை கேயம்பேடு பேருந்து நிலையத்தில் மாரிமுத்து காத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர், மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தியுள்ளார். ‛கையில் என்ன வைத்திருக்கிறாய்…| என அந்த நபர் கேட்க, ‛தன் மகன் வீட்டில் இருந்து அரிசி எடுத்துச் செல்வதாக,| அந்த முதியவர் கூறியுள்ளார்.


சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து அவரை விசாரித்த அந்த நபர், ‛உன்னை பார்த்தால் ரேஷன் கடையில் அரிசி கடத்துபவர் போல உள்ளது… எங்கிருந்து இந்த அரிசியை கடத்துகிறாய் …| எனத் துருவித் துருவி கேட்டுள்ளார். உடனே பயந்து போன மாரிமுத்து, ‛ஐயா… நான் என் மகன் வீட்டிலிருந்து தான் எடுத்து வருகிறேன்… வேண்டுமானால், என் மகனுக்கு போன் செய்து தருகிறேன்… நீங்களே கேட்டுப்பாருங்கள்…| என மாரிமுத்து மன்றாடியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த விசாரணை நபர், ‛உன் மீது சந்தேகமாக இருக்கிறது… உன்னை சோதனையிட வேண்டும்,| என்று கூறி, அவரது சட்டை பையில் இருந்து ரூ.4 ஆயிரம், மொபைல் போன் ஆகியவற்றை எடுத்ததுடன், அவர் வைத்திருந்த 15 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்தார். அத்தோடு, ‛இனி இந்த ஏரியாவில் உன்னை பார்க்க கூடாது…| என்று கூறி, அவரை அங்கிருந்து விரட்டினார்.

ஏமாற்றத்துடன் மீண்டும் மகன் வீட்டிற்கு வந்த மாரிமுத்து, ராமச்சந்திரனிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த ராமச்சந்திரன், கோயம்போடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் கோயம்போடு போலீசார் யாரும் அந்த செயலில் ஈடுபடவில்லை என்றும், போலீஸ் என நடித்து முதியவரிடம் அரிசி மற்றும் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய சிசிடிவி கேமராக்களை வைத்து சம்மந்தப்பட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அரிசியை திருடும் அளவுக்கு திருடர்கள் நிலை பரிதாபமாகிவிட்டதா…? இல்லை, அரிசியை கூட போலீசார் திருடுவார்கள் என்கிற மனநிலையில் தான் போலியை நம்பி முதியவர் தன் உடமைகளை பறிகொடுத்தார் என நினைத்து வருந்துவதா? என்கிற இருகேள்விகளுக்கு இடையே தலைநகர் சென்னையில் பிரதான பேருந்து நிலையத்தில் நடந்துள்ள இந்த நூதன வழிப்பறி, கட்டாயம் அவ்வளவு எளிதில் கடந்து செல்லும் விவகாரம் அல்ல. ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியிருக்கும் இந்த சம்பவத்தை உடனே தீவிரமாக விசாரிக்க போலீசார் முன்வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *