• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி தப்புமா..?

Byவிஷா

Jun 29, 2022

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, டெல்லி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 39 சிவசேனா எம்எல்ஏ-க்கள் தற்போதைய கூட்டணி அரசுடன் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் இதற்காக நாளை மும்பை செல்லவுள்ளதாகவும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.