• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன் எம்.பி

By

Sep 15, 2021

அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன் எம்.பி
வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெங்கடேசன் எம்.பி அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 150 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏன் மறுக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார்.

குடம் குடமாக கொட்டும் இந்த கண்ணீரில் சிறு துளியேனும் அனிதாவுக்காகவோ, தனுசுக்காகவோ, கனிமொழிக்காகலோ கசிந்திருந்தால், சற்றேனும் ஆறுதலாயிருந்திருக்கும். பாஜக வோ கல் நெஞ்சோடு நீட் விதி விலக்கு மசோதாவுக்கு எதிராக ஒரே ஒரு கட்சியாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்களித்து தீரா வஞ்சத்தை தமிழக மக்களின் மீது வெளிப்படுத்தியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்வி அனுமதி பற்றி ஒன்றிய அரசு தனது கடிதத்தில் என்னதான் கூறியிருக்கிறது என்று பார்ப்போம். மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ள பின்னணியில் தமிழ்நாடு அரசும் நிலத்தை தந்து 90 சதவீத சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கட்டுமானப் பணிகள் முடிவடைய தாமதம் ஆகுமென்பதால் 50 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரலாம்; அதற்காக தற்காலிக இடம் ஒன்றை தமிழ்நாடு அரசு ஒதுக்கித் தர வேண்டும் என்று ஒன்றிய அரசு கேட்டுள்ளது. அந்த தற்காலிக இடத்தில் என்னென்ன இருக்க வேண்டும்?

கல்வி வசதிகள் என்ற முறையில் குளிரூட்டப்பட்ட வகுப்பு அறைகள், உடற்கூறியல்- உடலியல்- நோய் அறிவியல்- உயிர் வேதியியல் – நுண் உயிரியல் இத்தனைக்கும் ஆய்வகங்கள், 50 பேர் அமரக்கூடிய ஒலி ஒளி காட்சி நிகழ்வறை, உயிரியல் அறுப்பு சோதனை அறை, அச்சு மற்றும் மின்னணு நூல்களைக் கொண்ட இணைய வசதியுடனான நூலகம், மாணவர்களுக்கான கிராமப்புற உடல் நல மையம், தேர்வு அறை, எய்ம்ஸ் பேராசிரியர் நியமனம் நடைபெறும் வரை தற்போது பணியில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் சேவையை உறுதி செய்தல் ஆகியன அடங்கும்.

தங்குமிட வசதி என்ற வகையில் எல்லா மாணவர்களுக்கும் தங்கும் விடுதி, உணவு அரங்கம், கல்விக் கூடம் தொலையில் இருந்தால் போக்குவரத்து வசதி ஆகியன அடங்கும்.
பொழுதுபோக்கு வசதிகள் என்ற வகையில், புறவெளி விளையாட்டு மைதானம், சதுரங்கம் – மேசைப்பந்து போன்ற ஏற்பாடுகளுடன் விளையாட்டு உள்ளரங்கம், யோகா – தியானத்திற்கு இட வசதி, டிவி – டிவிடி – இசை ஆகியன உள்ளடங்கிய அறை, இணைய மையம் ஆகியன அடங்கும்.
நிர்வாக அலுவலகம் என்ற வகையில் நிர்வாக இயக்குனர், துணை இயக்குநர் (நிர்வாகம்). மருத்துவக் கண்காணிப்பாளர், நிதி ஆலோசகர் மற்றும் முக்கியமான அலுவலர்களுக்கு போதுமான வசதியோடு இடம் தரப்பட வேண்டும்.

இதர வசதிகள் வங்கி, ஏடிஎம், தேநீரகம், நிர்வாக இயக்குநர் மற்றும் முக்கிய அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதி, அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வெளி வேலை ஒப்படைப்பு கட்டண அடிப்படையில் போக்குவரத்து, மதுரை – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மூலம் கணக்கு அலுவலர் – நிதி ஆலோசகர்கள் தற்காலிக நியமனம், இவ்வளவையும் ஒன்றிய அரசின் சுகாதார துறை மற்றும் தமிழ்நாடு அரசுத் துறையின் கூட்டு பார்வையிடல் வாயிலாக விரைவில் முடிக்க வேண்டும். என்று ஒன்றிய அரசு கோரியுள்ளது.

அண்ணாமலை அவர்களுக்கு, நம்முடைய கேள்விகள் என்னவெனில், இதில் சொல்லப்படுகிற வசதிகளை எல்லாம் சேர்த்தால் அது நிரந்தரக் கல்லூரிக்கு தேவையான பெரிய பட்டியல். நீட்டி முழக்கி கடிதம் எழுதியுள்ள ஒன்றிய அரசு இதற்கான நிதியை யார் தருவார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தையாவது கூறி இருக்கிறதா?

ஒன்றிய அரசின் பங்கும் பொறுப்பும் என்ன? மாநில அரசின் பங்கும் பொறுப்பும் என்ன? என்று எதைப் பற்றியும் பேசவில்லை. இதைவிட முக்கியம் 50 மாணவர்கள் சேர்க்கை என்பதற்கு முறையான அனுமதியை ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சில் தானே தரவேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களை தாங்களே அதிகரித்துக் கொள்ளும் அதிகாரம்.

தமிழ்நாடு அரசுக்கு உண்டா? இல்லை என்று தெரிந்தும் அதைப்பற்றி ஏன் பேச மறுக்கிறது? செலவுகளையெல்லாம் ஏற்று செய்வதாக இருந்தாலும் 50 இடங்களுக்கான தேசிய மருத்துவக் கழகத்தின் ஒப்புதல் கிடைப்பதற்கான உத்தரவாதம் உண்டா?

எந்த கேள்விக்கும் பதில் இல்லை. ஒற்றை செங்கலை வைத்து மூன்று ஆண்டுகள் ஓட்டியதைப் போல, மொட்டையாக ஒரு கடிதத்தை எழுதி அடுத்த சில ஆண்டுகளை ஓட்ட நினைக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

நீட் விசயத்தில் தமிழக மக்களுக்கு பாஜக மேல் இருக்கும் கோபத்தை திசைதிருப்ப தமிழக அரசின் மீது அவதூறு பரப்ப முயற்சிக்கிறீர்கள்.

அண்ணாமலை அவர்களே. 50 மாணவர்களுக்கான அனுமதி பற்றி தானே ஒன்றிய அரசு கூறியுள்ளது. நீங்கள் என்ன 150 மாணவர்களின் சேர்க்கையை தமிழக அரசு மறுப்பதாக கூறுகிறீர்கள்? பொய்யில் எண்ணிக்கை பொருட்டல்ல என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம், ஆனால் பொய்யென்றாலும் பொருந்தச்சொல்ல வேண்டும் என்பது தமிழகம் அறிந்த முதுமொழி.’ என தெரிவித்துள்ளார்.