• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

Byகுமார்

Jun 23, 2022

11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நான்கைந்து நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகேயுள்ள பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், வருகின்ற 2025-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழும். அதற்கான அடித்தளத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தொடக்கக் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வரத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு வேண்டாம் என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் மாநில கல்விக்கொள்கையை அறிவித்துள்ளார். கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல்வரின் தலைமையில் மாநில கல்விக் கொள்கையை வகுக்கும் வல்லுநர்களைக் கொண்ட முதல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். அதிலிருந்து பெறப்படுகின்ற தகவல்களைக் கொண்டு மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் அறிவிப்பார்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நடைபெற்ற தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன. தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே தமிழக முதல்வர் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தேர்ச்சி பெறத் தவறும் குழந்தைகளுக்காக உடனடித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். இந்த ஆண்டிலேயே உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தருகிறது. தேர்வு எழுதத் தவறிய மாணவர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
ஃபெயில் என்ற சொல்லையே நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம். முதல் முயற்சியில் மதிப்பெண் குறைவாகிவிட்டால், கவலையில்லை அடுத்த சில நாட்களில் நடைபெறும் அடுத்த முயற்சியில் மதிப்பெண் பெறலாம் என்றே தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மாணவர்கள் இதனை தோல்வியாகக் கருதக்கூடாது. என்னுடைய வேண்டுகோள், தயவுசெய்து பெற்றோர் பிற மாணவர்களோடு உங்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு மாணவ, மாணவியருக்குள்ளும் தனித்திறன்கள் உள்ளன. அதைக் கருத்திற் கொண்டுதான் தமிழக முதல்வர் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தையே தொடங்கியுள்ளார்.
தமிழக அரசு பள்ளிக்குழந்தைகளுக்காக வழங்குகின்ற இலவச நூல் மற்றும் குறிப்பேடுகள் உள்ளிட்ட பத்து விதமான இலவசப் பொருட்களை எவரேனும் விலைக்கு விற்றால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுகுறித்து எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் நிச்சயம் நடவடிக்கை உண்டு. பலவீனமடைந்துள்ள பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை அமைச்சரோடு இதுகுறித்துப் பேசியுள்ளேன். பள்ளிக்கட்டடங்களைச் சீரமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை தரவும் வேண்டுகோள் வைத்துள்ளேன். ஆகையால் விரைவில் அந்தப் பணிகளும் தொடங்கும். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீரமைக்கப்பட வேண்டிய பள்ளிக் கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளெல்லாம் தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். அரசுப்பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிஎஸ்ஆர் மூலமாகவும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடும் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.
அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் இந்த ஆண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர் தேர்வாணையத்திற்குத் தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டு நிறைய ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படும். ரீடிங் மாரத்தான் மூலம் மாணவ, மாணவியர் பயன் பெற வேண்டும் என்பதால்தான் இதனை அறிவித்தோம். தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும்’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இஆப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.