• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

வேலப்பர் கோவிலை எட்டாவது படை வீடாக்குமா?.. திமுக அரசு!

குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. இவ்வாறு வேலோடும், மயிலோடும் அருள் பாலிக்கும் ,தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளன.

சூரனை வென்ற வீரனாய் ,வள்ளி மணாளனாய், தெய்வானை காவலனாய் ,ஆண்டியாய், தனிகை மலையனாய், ஞான குருவாய் இப்படி பல தளங்களில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஆறுபடை முருகனுக்கு ,ஏழாம் படை வீடாக மருதமலை அமைந்திருப்பதாக கூறுவார்கள். அந்த வகையில் கந்தவேல் முருகனின் எட்டாம் படைவீடாக, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்திருக்கும் மாவூற்று வேலப்பர் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

ஜமீன்களின் ஆட்சி காலத்திற்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பளியர்கள் என்று சொல்லக்கூடிய பழங்குடியின மக்கள் வசித்து வந்தார்கள். இவர்கள் அன்றாட உணவிற்காக மலைகளில் தேன் எடுத்தும், வள்ளிக் கிழங்கை தோண்டி எடுத்தும் சாப்பிட்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள். ஒரு முறை வள்ளிக்கிழங்கை எடுப்பதற்காக குழி வெட்டும் போது அங்கிருந்து சுயம்புவாக முருகப்பெருமான் வெளிப்பட்டார்.அதேசமயம் அதனருகே இருந்த மருதமர வேர்களிலிருந்து தன்னிச்சையாக ஊற்று கிளம்பி வந்துள்ளது. .இதனை பார்த்து ஆச்சரியமும் ,அதிசயமும் அடைந்த பளியர்கள், அந்த சுயம்பு சிலையை எடுத்து மருதமரங்களின் வேர்களில் இருந்து வந்த நீரில் குளிப்பாட்டி, தெய்வமாக வைத்து வணங்க ஆரம்பித்தனர். மருத மர ஊற்று வேலவர் என்பதே மருவி மாவூற்று வேலப்பர் ஆக வந்ததாக கூறுவர்.

அதனைத் தொடர்ந்து அந்த சுனைநீர் வாய்க்காலாக செல்ல, அந்த புண்ணிய நீரை பருகுவதற்கு வெள்ளை யானை ஒன்று வந்து தண்ணீரை குடித்து விட்டு மறைந்து சென்றது .இதனை பார்த்த பளியர்கள் சாட்சாத் விநாயகப் பெருமானே ,யானை உருவில் வந்து காட்சி கொடுத்ததாக கருதி ,இதுகுறித்த தகவலை கண்டமனூர் ஜமீனுக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த சமயம் தனது அக்கிரமங்களால் நோய்வாய்ப்பட்டு போயிருந்த கண்டமனூர் ஜமீன் , தன் உடலிலுள்ள நோயைப் போக்க இந்த புண்ணிய தீர்த்தத்திற்கு வந்து குளித்து ,முருகனை வழிபட்டு ,தனது அந்திம காலம் முழுதும் அங்கேயே குகை அமைத்து தங்கியதாக கூறப்படுகிறது. தற்போது அதற்கு சான்றாக குகையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பின்பு எட்டுத்திக்கும் முருகப்பெருமானின் அருளும், புகழும் பரவ பக்தர்கள் இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி தங்களை பிணியைப் போக்க முருகனை வணங்கி வந்தனர். அதன் பின்னரே முருகனுக்கு மேலும் ஒரு சிலை வைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் பால் காவடி பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி மற்றும் பால்குடம் (தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திவந்தனர். தேனி மாவட்டம் அல்லாது மதுரை திண்டுக்கல் ,சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக வந்து முருகனை வழிபட்டு சென்றனர் .வழிநெடுகிலும் பக்தர்கள் அன்ன சத்திரங்கள் அமைத்து ,நடைபயணமாக வரும் மக்களுக்கு பானாக்கரம் ,மோர், அன்னதானங்களை வழங்கி வருகின்றனர் .

முருகப்பெருமானுக்கு காவல் தெய்வமாக குதிரையில் அமர்ந்துள்ள கருப்பசாமிக்கு, இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு பக்தர்கள் கிடா வெட்டியும் ,சேவல்கள் அறுத்தும் விருந்து படைத்து மகிழ்ந்து வருகின்றனர். தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, முடி காணிக்கை செலுத்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் அமாவாசை, பவுர்ணமி, இந்து மத பண்டிகை தினங்களிலும், செவ்வாய் மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வர். இயற்கை எழில் சூழ அமர்ந்திருக்கும் இந்த முருகப்பெருமானின் திருத்தலத்தில் தற்போது பக்தர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை குறிப்பாக காதணி விழா உள்ளிட்ட விசேஷங்களை நடத்தி விருந்து வைத்து மகிழ்கின்றனர் .

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் இங்கு பல ஆண்டுகளாகியும் மீண்டும் குடமுழுக்கு நடைபெறாமல் இருப்பது பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ள இந்த திருத்தலத்தை அரசு சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் இங்கு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அரசுக்கு இதன் மூலம் வருவாயும் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மருதமலை கோயிலை ஏழாவது படை வீடு என பக்தர்கள் புகழ்ந்துரைத்து வரும் நிலையில், 8வது படை வீடாக வேலப்பர் கோவிலும் உருவாக்கப்படுமா? என  திமுக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.