• Tue. Apr 30th, 2024

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்… ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
பொன். மாணிக்கவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய போது, தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சேகர் ராம் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் போலி பத்திரிக்கையாளர்களை களையெடுப்பது தொடர்பாக விசாரணையை விரிவுபடுத்தியது உயர்நீதிமன்றம்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
பிரஸ்கிளப் மற்றும் பத்திரிக்கையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் சாதி மத மொழி அடிப்படையில் பத்திரிக்கையாளர் சங்கங்களை அனுமதிக்க கூடாது என்றும், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிக்கையாளர் சங்கங்ளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்க கூடாது என்றும், போலி பத்திரிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்க கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்க வேண்டும், இந்த அடிப்படையில் அங்கீகார அடையாள அட்டை வழங்கும் விதிகளில் 3 மாதங்களில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை இயக்குனர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *