• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

நீலகிரியில் 905 வழக்குகளுக்கு தீர்வு!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.  

இதை தொடங்கி வைத்து முதன்மை நீதிபதி பேசுகையில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், குடும்ப பிரச்சினை சம்பந்தமான வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தேசிய வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான அனைத்து வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் சமரச தீர்வு காணப்பட உள்ளது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடிக்கப்படும் வழக்குகளில் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும். இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் பல்வேறு வழக்குகளுக்கு சமரசம் செய்து வைத்தார்.  நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ஸ்ரீதர், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிராஜன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முருகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை எடுத்துக் கொண்டு சமரச தீர்வு கண்டனர்.

கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ஜெயபிரகாஷ் தலைமையிலும், குன்னூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி லிங்கம் தலைமையிலும், கூடலூர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பாபு தலைமையிலும், பந்தலூர் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 1, 577 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 905 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.1 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 754 ஆகும். வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான 672 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ.4 கோடியே 36 லட்சத்து 75 ஆயிரத்து 610 ஆகும்.