• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர். குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன் –பாகம் 1’ சென்னையில் வெளியிடப்பட்டது.

அந்த நூலில் மு.க. ஸ்டாலின் பிறந்ததில் இருந்து நெருக்கடி நிலை காலகட்டத்தில் அவர் சிறை சென்றது வரையிலான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில சுவாரஸ்யமான பகுதிகள் இங்கே அளிக்கப்படுகின்றன:
335 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தின் முன்பகுதியில் சுமார் நூறு பக்கங்களுக்கு மேல், மு.க. ஸ்டாலினின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களே பெரிதும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகு 9வது அத்தியாயத்திலிருந்து தனது தீவிர அரசியல் செயல்பாடுகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார் மு.க. ஸ்டாலின்.

சலூன் நாற்காலியில் சுழன்றபடி…

“எனது அரசியல் சண்முகம் முடிதிருத்தும் நிலையத்தில்தான் துவங்கியது. அங்கேதான் அடிக்கடி எனது நண்பர்களுடன் கூடுவேன். அப்போது எனக்கு 13 வயது. 1966ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தொடங்கினோம்.
ஆண்டுதோறும் பொங்கல் விழா, அண்ணா பிறந்தநாள் விழா அகியவற்றை நடத்தத் தொடங்கினோம். சிறு குறிப்பேடு வைத்து கழக முன்னணியினரிடம் நிதி வசூல் செய்து இந்த விழாக்களை நடத்தினோம்.
பொங்கல் நாளன்றும் அண்ணா பிறந்த நாளன்றும் காலையில் இனிப்பு வழங்கினோம். மாலையில் விழாக்கள் நடத்தினோம். இத்தகைய சிறுசிறு விழாக்கள் நடத்துவது மிகப் பெரிய பயிற்சியாக இருந்தது.

1967 தேர்தலில் பிரச்சாரக் களத்தில் அடியெடுத்து வைக்கத் தொடங்கினேன். சைதை தொகுதியில் தலைவர் போட்டியிட்டார். அவர் வாக்குக் கேட்டு வருவதற்கு முன்னதாக மெகா போன் வைத்து குரல் எழுப்பிச் செல்லத் தொடங்கினேன்.
இப்படிக் கூட்டத்திற்குச் செல்லும்போது பெருமையாக இருக்கும். சைதாப்பேட்டை மட்டுமல்ல, சென்னையின் பல்வேறு இடங்களுக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது.

அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்கள் திடீரென மறைவெய்தினார். அவரது குடும்பத்திற்கு நிதி திரட்டிவந்தார் முதல்வர் கலைஞர். அப்போது கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பிலும் நிதி திரட்டினோம்.
கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. நடத்திய காலத்தில்தான் நான் அண்ணாவின் அன்பை அதிகம் பெற்றேன்.”

அண்ணா என்றொரு அன்பு உயிர்

“கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சா்பில் 30.09.1968 அன்று முதல் கூட்டம் நடத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவாக அது ஏற்பாடு செய்யப்பட்டது. கோபாலபுரம் கிருஷ்ணன் கோவில் சாலையில் நடந்த அந்த விழாவுக்கு மாநகராட்சி கவுன்சிலர் ஜேசுதாஸ் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் ஏ. கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர்., ம.பொ.சி., ப.உ. சண்முகம், அப்துல் சமது, துரைமுருகன், இரா. சனார்த்தனம் ஆகியோர் அழைக்கப்பட்டார்கள். அந்த விழா மிகச் சிறப்பாக நடந்தது. அதன் உற்சாகத்தில் அடுத்த ஆண்டு இன்னும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டோம்.

1969 பேரறிஞர் பெருந்தகைக்கு மணிவிழா. அதனை முன்கூட்டியே கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் கொண்டாடத் திட்டமிட்டோம். அண்ணாவையே நடுநாயகமாக அமரவைத்து நடத்த விரும்பினோம்.
முதல்வர் அண்ணாவை அழைக்க அவரது நுங்கம்பாக்கம் இல்லத்திற்குச் சென்றேன். அண்ணா அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறார்கள். மாடியில் அண்ணா அவர்கள் இருக்கிறார்கள். முன்னணித் தலைவர்கள் அனைவரும் கீழே இருந்தார்கள்.
அவர்களிடம் நான் வந்த நோக்கத்தைச் சொன்னேன். உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்று சொல்லி சந்திக்க இயலாத சூழ்நிலையை அவர்கள் சொன்னார்கள். நான் கோபாலபுரம் திரும்பிவிட்டேன்.
சில நிமிடங்களில் முதல்வர் அண்ணாவின் கார் கோபாலபுரம் வீட்டு வாசலில் வந்து நின்றது. அண்ணாவின் வாகன ஓட்டுநர் சண்முகம் அவர்கள் வந்து என்னை அழைத்தார். ‘அய்யா உங்களை அழைத்து வரச்சொன்னார்’ என்று சொன்னார். அண்ணாவின் முதல்வர் வாகனத்திலேயே அவரைச் சந்திக்கச் சென்றேன்.
குழந்தை முகத்துடன் எப்போதும் புன்சிரிப்புடன் காட்சியளிக்கும் அண்ணா அவர்கள் அன்று சோர்வுடன் காணப்பட்டார்கள். அவரது உடல்நோவு, அவரது முகத்தில் தெரிந்தது.
‘நாங்கள் உங்கள் மணிவிழாவை நடத்துகிறோம். நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று தேதியைச் சொல்லிக் கேட்டேன்.
‘உன் அப்பனைப் போலவே பிடிவாதக்காரனாக இருக்கிறாயே?’ என்றார் அண்ணா. என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு இதுதான். 16 வயதில் கிடைத்த பெரும் பாராட்டு.” அண்ணா அவர்கள் 1969 பிப்ரவரி 3ஆம் நாள் கோடிக்கணக்கான மக்களை அழ வைத்துவிட்டு வங்கக் கடலோரம் மீளாத் துயில் கொண்டுவிட்டார்.
எந்த விழாவை அண்ணாவை வைத்து நடத்த நினைத்தேனோ, அந்த விழாவை அண்ணா அவர்கள் இல்லாமல் நடத்தினேன்”

அப்பா பேச்சைக் கேள் என்றார் எம்.ஜி.ஆர்

“முரசே முழங்கு 40வது நாடக நிறைவு விழா 28.03.1971 அன்று சென்னையில் நடந்தது. திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மணிமண்டபத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் விழா நடந்தது.
நாடகக் கலைஞர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் கேடயம் வழங்கினார்கள். நாடகக் கலைஞர்கள் அனைவருக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் மோதிரம் அணிவித்தார்கள்.

எனக்குத் தலைவர் அவர்கள் கணையாழி அணிவிக்கும்போது தலைவருக்கு அண்ணா அணிவித்த மோதிரம் என் நினைவுக்கு வந்தது. நான் தலைவரல்ல என்றாலும் அத்தகைய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினத்தேன்.
இந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசும்போது, நாடகம் போடும் வேலையை விட்டுவிட்டு ஒழுங்காக படிப்பில் கவனத்தைச் செலுத்து என்று அறிவுரை கூறினார்கள்.

‘கலைஞர் அவர்களின் புதல்வர் ஸ்டாலினுக்குச் சொல்லிக்கொள்வேன். தான் பெற முடியாத கல்லூரிக் கல்வியை ஸ்டாலினும் இழந்துவிடக் கூடாது என்று கலைஞர் சொன்னார். அதை அவர் எவ்வளவு வேதனையோடு சொன்னார் என்பதை ஸ்டாலின் உணர வேண்டும். ஒரு தந்தை நூறு பக்கங்களில் மகனுக்கு எழுத வேண்டிய கடிதத்தை அவர் ஒரு வரியில் குறிப்பிட்டார்.

நானும் தி.மு. கழகத்திலே பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். ஆனாலும் கலைப் பணியிலே கருத்தோடு ஈடுபடுகிறேன். அதைப் போல நாடகத்திலே கவனம் செலுத்தலாம். அதே நேரத்தில் படிப்பில் கவனம் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மறைந்தபோது, அவர் குடும்பத்திற்கு நிதி வழங்க தலைவர் அவர்கள் நிதி திரட்டினார்கள். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பிலும் நிதி திரட்டி வழங்கினோம். எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிட்டுத்தான் நிதி திரட்டிக் கொடுத்தோம். அப்போது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மேலாளராக இருந்த பத்மநாபனிடம் கேட்டோம். அவரும் அனுமதி கொடுத்தார்.

நாடோடி மன்னன் படத்தைத் திரையிட்டோம். அது ராம் திரையரங்கில் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தனது படத்தை எப்போதும் இரவுக் காட்சியாகத் திரையிட வேண்டும் என்றுதான் எம்.ஜி.ஆர். நினைப்பார். நான் பகல் காட்சியாகத் திரையிடுகிறேன் என்பதை அறிந்து கோபம் அடைந்துவிட்டார்.
ராம் திரையரங்கிற்குப் போன் செய்தார். தியேட்டர் மேலாளர் ரத்தினத்தை அழைத்து என்னைக் கூப்பிடச் சொன்னார். நான் போனை எடுத்துப் பேசியபோதும் கோபப்பட்டார். ‘யாரைக் கேட்டு என்னுடைய படத்தை பகல் காட்சியாக திரையிடுகிறாய்?’ என்று கேட்டார். ‘மேனேஜர் பத்மநாபனுக்குச் சொல்லிவிட்டேன். ஏ. கோவிந்தசாமி அவர்களின் குடும்பத்துக்காகத்தான் நிதி திரட்டுகிறோம்’ என்று சமாதானம் சொன்னேன். அவரது கோபம் தணிந்தது.
1971 சட்டமன்றத் தேர்தலில் கழகமும் கலைஞர் அவர்களும் அடைந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னால் கழகத்தை பிளவுபடுத்த பல்வேறு சதிச் செயல்கள் நடந்துவருவது அப்போது செய்திகளாக உலா வந்தன. அந்த சதி வலையில் எம்.ஜி.ஆர் அவர்கள் சிக்குவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.”

மெல்லத் திறந்தது சிறைக் கதவு…

“1976 பிப்ரவரி 1ஆம் நாள் காலையில் நான் வந்தபோது கோபாலபுரம் வீடே பதற்றமாக இருந்தது. முந்தைய நாள் இரவு அண்ணன் மாறன் அவர்களைக் கைது செய்துவிட்டார்கள். நானும் அடுத்து கைது செய்யப்படலாம் என்று நினைத்தார்கள்.
நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின்
என்னைப் பார்த்ததும் அம்மாவும் துர்காவும் அழத் தொடங்கிவிட்டார்கள் அப்போதுதான் தலைவர் அவர்களின் குரல் ஆவேசமாகக் கிளம்பியது.
பொது வாழ்க்கைக்கு வந்தால் எல்லாவித தியாகத்துக்கும் தயாராகத்தான் இருக்க வேண்டும். என்று தலைவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். அந்தக் குரல்தான் அனைவரையும் அமைதிப்படுத்தியது
போலீஸ் உன்னைத் தேடுகிறது. அதனால் நீ தயாராக இரு என்று தலைவர் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர் என்ன சொன்னார் என்பதை உணர்வதற்கு முன்னால் நான் தலையை ஆட்டினேன்.
நான் சீக்கிரமாக வந்துவிடுவேன். வெளியூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக போயிருக்கிறதாக நினைத்துக்கொள் என்று ஆறுதல் கூறி தேற்றிட நினைத்து வாய்க்கு வந்த வார்த்தைகளை நான் சொன்னேன்.
தலைவரைப் பார்த்து படாரென்று அவரது காலில் விழுந்தேன். வணங்கினேன்.
தொலைபேசி அருகே போனார் தலைவர். அதனை எடுத்து எண்களைச் சுழற்றினார். ‘ஸ்டாலின் வந்துவிட்டான்’ என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.
கோபாலபுரம் வீட்டு வாசலுக்கு காவல்துறை வாகனம் வந்துவிட்டது. காவல்துறை கோபாலபுரம் வீட்டுக்கு வருவதற்கு முன்புவரை எனது உள்ளத்தின் ஓரத்தில் லேசான பயம்கூட இருந்தது. ஆனால், காவலர்கள் இரண்டு பக்கமும் இருந்து என்னை அழைத்துச் செல்லும்போது என்னை அறியாமல் வேறு ஒரு ஸ்டாலினாக நான் மாறத் தொடங்கினேன்.
மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு இருப்பதால் எனது தண்டனைக் காலம் எவ்வளவு என்பது குறித்து எதுவுமே தெரியாத நிலையில் சிறைச்சாலை நோக்கிப் பயணமானேன்.
சிறைச்சாலை சித்திரவதைக் கூடாரமாக நடத்தப்பட்ட கொடுமைகள் அத்தனையும் பதைபதைக்க வைக்கும் நிகழ்ச்சிகள் என்றாலும் அவை ஒரு கொள்கை வீரனுக்கு எதையும் தாங்கும் சக்தியை உருவாக்கியது,” என்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த சுயசரிதையை பூம்புகார் பதிப்பகம் 500 ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளது.