சென்னை அயனாவரம் மார்க்கெட் சாலை பகுதியை சேர்ந்தவர் நாகூர்கனி. இவர் பாஸ்ட்புட் ஒன்றை நடத்தி வருகிறார்.
நாகூர் கனி நடத்திவரும் பாஸ்ட்புட் கடைக்கு கே.கே. நகரை சேர்ந்த சேகர் என்பவர் சென்றுள்ளார். திமுகவில் முக்கிய நிர்வாகி என்று கூறிய அவர் பிரியாணி , புரோட்டா ஆகியவற்றை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றுள்ளார். நாகூர் கனி பணம் கேட்கும் போதெல்லாம் திமுக நிர்வாகியிடம் பணம் கேட்கிறாயா? என்று கூறி அவர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
கடந்த சில நாட்களாக இதே போல் செய்துவரும் சேகர், நேற்று முன்தினமும் நாகூர்கனி கடைக்கு வந்துள்ளார். சேகர் பிரியாணி வேண்டும் என்று கேட்க , கடை உரிமையாளர் நாகூர்கனி பணம் கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த அவர், தகாத வார்த்தையால் அவரை திட்டியதுடன், கடையை நடத்த விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் நாகூர்கனி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சேகர் வேறு ஒரு கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்துள்ளதும், கட்சியில் பெரிய அளவில் எந்த பொறுப்பையும் அவர் வகிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஓசி பிரியாணி , பரோட்டாவுக்காக அவர் பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.