• Tue. Apr 30th, 2024

திருச்சி இலங்கை தமிழர் முகாமில் இருவர் கவலைக்கிடம்!…

By

Aug 20, 2021

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80 பேர் குற்ற சம்பவங்கள் மற்றும் பயண ஆவணங்கள் தொடர்பான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்கள் சிலர் தண்டனை காலம் முடிந்தும் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டால் கூட வேறு வழக்குகளை பதிவு செய்வதாகவும், கொரோனா காலத்தில் கூட தங்களது குடும்பத்தினருடன் வசிக்க அனுமதிக்கவில்லை என்றும் கடந்த சில மாதங்களாக காத்திருப்புப் போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து கடந்த ஜூலை 15ம் தேதி 20க்கும் மேற்பட்டோா் விடுவிக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து தங்களையும் விடுவிக்க வலியுறுத்தி பலா் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால் போராட்டம் நடத்தியதற்காக தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி 18 பேர் தூக்கு மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். மணன், நிக்சன் ஆகிய இருவரும் தங்களது வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் கூா்மையான ஆயுதத்தால் கிழித்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றனர்.

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் மட்டும் தொடர்ந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. விடுதலை வேண்டி, 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த நிரூபன், முகுந்தன் ஆகியோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இருவரும் போலீஸ் உதவியுடன் வலுக்கட்டாயமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *