• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தலைவர் படத்தை நான் தயாரிக்கிறேனா? – போனி கபூர்

ரஜினியின் 170 வது படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் வெளியான தகவலை போனி கபூர் மறுத்துள்ளார். மேலும், இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்..

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர், தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி, அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினியின் 169 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது! இந்த படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்! இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. அருண்ராஜா காமராஜ் தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தலைவர் 170 படத்தை தான் தயாரிக்க உள்ளதாக வெளியான தகவலை போனி கபூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், ரஜினியும் நானும் நீண்ட காலமாக நல்ல நண்பர்கள். அடிக்கடி சந்தித்து எங்களின் ஐடியாக்களை பகிர்ந்து கொள்வோம். ஒருவேளை நாங்கள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக முடிவு செய்தால் முதல் ஆளாக நானே அதனை அறிவிக்கிறேன். நீங்களாக உங்களின் கருத்துக்களை கசிய விட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.