• Tue. Apr 30th, 2024

தலைவரை முன்ன போக விட்டு வேட்பாளரை பின்னாடி தாக்கிய பாஜகவினர்…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன்படி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சென்னை முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இன்று காலை கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக அண்ணாமலை வந்தார். கொளத்தூர்- செங்குன்றம் சாலை மூகாம்பிகை பேருந்து நிலையம் அருகே அவர் பிரசாரம் செய்வதற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

அதில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 7 வேட்பாளர்களும் மேடையில் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அண்ணாமலை மேடையில் ஏறி பிரசாரம் செய்வார் என்று பாஜ தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து காரில் வந்த அண்ணாமலை அங்கு கூட்டம் குறைவாக இருந்ததால் அப்செட் ஆனார். இதனால் அவர் மேடையில் ஏறாமல் வாகனத்திலேயே நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசிய இடம் 3 சாலைகளின் சந்திப்பு என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். இதனால் அவர் பிரசாரம் செய்ய தொடங்கிய சில வினாடிகளிலேயே அடுத்தடுத்து வரிசையில் நின்ற வாகன ஓட்டிகள் ஹாரன் அடிக்க தொடங்கினர். இதனால் அண்ணாமலை 2 முறை மக்களை திரும்பி பார்த்து கோபப்பட்டார். இதையடுத்து வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் கூறி, இவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டு வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் நாம் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கூறிவிட்டு பேச்சை முடித்துவிட்டு உடனடியாக கிளம்பி சென்றார்.

இதையடுத்து அவர் கிளம்பிய சில வினாடிகளிலேயே பாஜக சார்பில், 64 வது வார்டில் போட்டியிடும் சரவணன் என்பவரை சூழ்ந்துகொண்ட பாஜக நிர்வாகிகள், ”புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நீங்கள் ஏன் கொளத்தூரில் போட்டியிடுகிறீர்கள். இங்கு பாஜகவில் ஆளா இல்லை’ என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முத்தையாவை அடிக்க பாய்ந்தனர். பதிலுக்கு மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் வேட்பாளரை அடிக்க பாய்ந்ததால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்குவந்த போலீசார் பாஜவினரை எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *