• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்! – இபிஎஸ்..

அழகான பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டத்தை விட, நோபல் பரிசே வழங்கலாம்” என எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் தஞ்சாவூர் ரயிலடியில் மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அதிமுக. ஆனால், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன வாக்கை திமுக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சும் என திமுக இரட்டை வேடம் போடுவதாக குறிப்பிட்ட அவர், பொன் விளையும் பூமியான தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின் என்றும் அதைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதாதான் என்றும் கூறினார்.

அதிமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்ட இபிஎஸ், தேர்தல் வாக்குறுதியில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றுவதாக தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகை அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கப்பட்டபோது, ரூ.5,000 வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியதாக குறிப்பிட்ட எடப்பாடி, தர்போது அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசுத் தொகையே கொடுக்கவில்லை என்று சாடினார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.410 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் நிறைந்த அழகான பொங்கல் பரிசு வழங்கிய ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டத்தை விட, நோபல் பரிசே வழங்கலாம் என்றும் விமர்சித்தார்.