புனீத் ராஜ்குமார் நடித்த கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் பிப்ரவரி 11 அன்று வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. கன்னட திரையுலகில் மட்டுமல்ல கன்னட மக்களால் அன்புடன் அப்பு என்று அழைக்கப்பட்டவர் மறைந்த புனீத் ராஜ்குமார். 2021 அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார்.

‘ஜேம்ஸ்’ படம் வருகிற மார்ச் மாதம் 17-ம் தேதி புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ’ஜேம்ஸ்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அசத்தலான ஆக்ஷன் காட்சிகளுடன் டீசரில் தன் நடிப்பால் ரசிகர்களை அசரடித்துள்ளார் புனித் ராஜ்குமார். இதற்குப் பிறகு புனித் ராஜ்குமாரை வேறுப் படங்களில் பார்க்க முடியாததால், அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

