• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. லாரி ஓட்டுநரான இவருக்கு போதினி என்ற மனைவியும் கிருஷ்ணவேணி என்ற மகளும், நிதிஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.

இவரது மகள் கிருஷ்ணவேணி பாப்பான்விடுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். 9 வயதான நிதிஷ்குமார் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த மாணவன் நிதிஷ்குமாருக்கு நேற்று மாலை வகுப்பறையில் இருந்த போது திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த பள்ளியின் வகுப்பறை ஆசிரியர் ஆரோக்கியம் உடனடியாக மாணவனை அழைத்துக் கொண்டு போய் அவர் வீட்டில் விட்டுள்ளார்.

வீட்டில் நிதிஷ்குமாரின் பாட்டி மட்டுமே இருந்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை பணிக்காக சென்றுள்ளனர். இதனையடுத்து நிதிஷ் குமாரின் தந்தை நாடிமுத்துவுக்கு செல்போன் மூலம் ஆசிரியர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவனை அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உடனடியாக மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதே அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மாணவனின் உயிர் இழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் தற்போது மாணவனின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் கேட்டு அக்கிராம மக்கள் அந்த பள்ளியில் குவிந்து நேற்று மாலை விளக்கம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.

இதனால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அந்த பள்ளி வளாகத்தில் ஒரு நல்ல பாம்பு சுற்றி திரிவதை பார்த்த அக்கிராம மக்கள் அதனை அடித்துள்ளனர். பள்ளி வளாகத்தில் பாம்பு அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திருந்தது.

மேலும் பள்ளிக்கு வீட்டிலிருந்து நன்றாக வந்த மாணவன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் மாணவனின் உயிரிழப்புக்கு முறையான காரணத்தை பள்ளி நிர்வாகமும் மருத்துவர்களும் தெரிவிக்க வேண்டுமெனவும் மாணவனின் தந்தை நாடிமுத்து ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.