• Sun. Apr 28th, 2024

பாஜக அரசின் கவர்னர் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கமாட்டார் – சீமான்

Byகுமார்

Feb 7, 2022

தமிழக ஆளுநர் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதால் நீட் தேர்விற்கு எதிராக இருக்கமாட்டார், கூட்டணி இல்லை என்றாலும் அதிமுக பாஜகவை நயந்து செல்லும் நிலையில் தான் உள்ளது என்று மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவருக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பதால் பதவிகளுக்கு பேரம் தான் நடைபெறும், திமுக ஆளும்கட்சி ஆனவுடன் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்கின்றனர், திமுக சின்னத்தில் நின்ற மதிமுக எப்படி தனிக்கட்சி ஆகும்,

திமுக எங்களை பொருட்படுத்துவதில்லை! ஆனால், எங்கள் கட்சியில் இருந்து திமுகவிற்கு சென்றால் மட்டும் பிரம்மாண்டமாக பேசுகின்றனர், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

தமிழக ஆளுநர் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதால் நீட் தேர்விற்கு எதிராக செயல்படமாட்டார். அது தான் அவர்களது கோட்பாடு என்றார். ஆளுநர் சட்டப்படி செயல்படுகிறார் என்ற ஒபிஎஸ்சின் கருத்துக்கு பதிலளித்தபோது, அதிமுக பாஜகவுடன் உள்ளாட்சியில் கூட்டணி இல்லை என்றாலும், பாஜகவை அனுசரித்து செல்ல வேண்டும் என்பதால் பாஜகவை நயந்து பேசுகிறார்கள்

நாட்டில் விரும்பிய கல்வி, விரும்பிய உணவு, விரும்பிய ஆடை அணிய முடியாத நிலை உள்ளது. இந்த நாட்டில் பிறந்ததை தவிர என்ன பாவம் செய்தோம் என்கிற நிலையில் உள்ளோம். நீட் தேர்வால் பாதிப்பு நடைபெற்று வருவதை பாதிப்பே இருக்காது என்று சொல்வது தான் பாஜகவின் கொள்கை, சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாத பாஜகவிடம் நாடு சிக்கிகொண்டுவிட்டது, ஏழரை ஆண்டுகளில் அதானியை இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆக்கியதே பாஜகவின் சாதனை.

மதம் ஒன்றை தவிர பாஜக எதைப் பற்றியும் பேசுவதில்லை, பாஜக அரசு எந்த சாதனையும் செய்யவில்லை. நெய்யை எரிப்பது, பாலை கொட்டுவது, மாட்டு மூத்திரத்தை குடிப்பது இங்கு மட்டுமே நடைபெறுகிறது. ஐந்து மாநில தேர்தலுக்காக வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது பாஜக அரசு என்றார்.

தமிழகத்திற்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், நிதி ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசு தமிழகத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டது, தமிழர்களை பார்த்தால் பாஜக, காங் கட்சிகளுக்கு பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் எங்களது பணம் தேவைப்படுகிறது. எங்களது பணத்தை தின்பது வெட்கமாக இல்லையா? நாடாளுமன்றத்தில் தமிழில் தம்பிதுரை பேசும்போது ஊளையிட்டு இழிவுபடுத்துகின்றனர் என்றார்.

தமிழகத்தை பாஜக ஆளமுடியாது என்ற ராகுல் காந்தியின் பேச்சு குறித்த கேள்விக்கு, தமிழகத்தை பாஜக எப்போதும் ஆளாது! அதேபோன்று காங்கிரசும் ஆளாது என்றார்.

தமிழகத்தில் பாஜக ஆளும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, அண்ணாமலை தமிழக பாஜக தலைவரானதால் தொண்டர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார். நாம் தமிழர் கட்சி அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம், 2026-லும் தனித்தே நிற்போம் என்றார்.

சமூகநீதி கூட்டமைப்பு தொடர்பான ஸ்டாலினின் கடிதம் குறித்த கேள்விக்கு, ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு அழைப்பு விடுப்பதன் மூலம் அகில இந்திய தலைவராக முயற்சிக்கின்றார். சாதி வாரி கணக்கெடுக்க திமுக அரசுக்கு துணிவு இருக்கிறதா? இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சை போடுகிறீர்கள். சமூக நீதி கூட்டமைப்பில் சோனியா, ராகுல் வருவார்களா? என்று கேள்வி எழுப்பினார்!

திமுகவின் ஒரு வருட ஆட்சியில் சைக்கிள் ஓட்டுவது, டீ குடிப்பது போன்ற செய்தி அரசியலே நடைபெற்றுள்ளது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் குஜராத்தில் இருந்து வெல்லம் இறக்குமதி செய்தது ஏன்?
எதிர்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு ஆதரவாக பேசிவிட்டு அதிகாரத்திற்கு வந்தவுடன் திமுக மக்களை கண்டுகொள்வதில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *