• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கான திட்டம் என்ன? – விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!…

By

Aug 12, 2021

வனத்துக்குள் விட்டும் ஊருக்குள் திரும்பி வந்த ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து நாளை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.

அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அனாதையாக சுற்றி வந்த ரிவால்டோ யானை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுடன் நெருங்கி பழகி விட்டதால், காட்டில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் விட்டும் கூட, அடுத்த நாளே திரும்பி வந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

யானையை மீண்டும் வனத்தில் விடும் போது அதன் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அதை மீண்டும் வனத்துக்கு அனுப்ப வேண்டாம் என வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ரிவால்டோ யானையை மீண்டும் வனத்துக்கு அனுப்பினாலும் அது திரும்பி வந்து விடும் எனவும், அப்போது மின்சார வேலியில் சிக்கி பலியாக வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதஒய நிலையில் யானைக்கு மயக்க மருந்து செலுத்த கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அதை எம்.ஆர்.பாளையம் முகாமுக்கு கொண்டு வர இயலாது என்றார்.

இதையடுத்து, ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து நாளை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.