• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகச் செயல்படவில்லை தலைமைச் செயலாளர்

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழ்நாட்டில்பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தலைமைச் செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, எதிர்காலத்தில் அனுமதி இன்றி சிலைகள் அமைப்பதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.சிலைகளை அகற்றுவதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் என்ன? என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.அதன்படி தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களை பல்வேறு துறைகளின் ஆய்வுக்கு உட்படுத்தி முதல்வரின் உத்தரவைப் பெற்று வருவாய்த் துறை இறுதி உத்தரவைப் பிறப்பிக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


அதன்படி வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அரசு நிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் சிலைகள் அமைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதுபோன்று சிலைகள் அமைக்கப்படுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை பெற வேண்டும். பட்டா நிலங்களில் அமைக்கப்படும் சிலைகளை பராமரிப்பதற்கான செலவை அதனை அமைப்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சட்டம் ஒழுங்கு பிரச்சினை, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் என உச்ச நீதிமன்ற உத்தரவைக் கருத்தில் கொண்டு சிலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.