• Sat. Apr 27th, 2024

வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து ? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 6,452 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்தால் வரும் வாரங்களில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள நேதாஜி சிலைக்கு, அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் , தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்த நிலையில், நேற்றும் இன்றைக்குமான பாதிப்புகளை ஒப்பிட்டு பார்க்கையில், தொற்று பாதிப்பு சற்று குறைந்திருகிறது.

சென்னையை பொருத்தவரை 9000 வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6000 ஆக குறைந்திருப்பது மன நிறைவை தருகிறது. இதேபோல் இந்தியாவின் பெருநகரங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பது ஆறுதலான விஷயம். எனவே தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும்போது முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாகும் இருக்குமெனவும், தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *