• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குடியரசு தின வாகன ஊர்திகள் எப்படி, எதனால் தேர்வு செய்யப்படுகிறது?

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதுபோலவே கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எந்த அடிப்படையில் இந்த ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஊர்திகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

நாடு முழுவதும் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், டெல்லியில் நடத்தப்படும் கண்கவர் அணிவகுப்புகள் மிக முக்கியமானது. அதிலும் பல்வேறு மாநில அரசுகள் தங்களது கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளிட்டவற்றை நாட்டிற்கு பறைசாற்றும் விதமாக வரும் கண்கவர் வாகனங்கள்தான் இந்த கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடிக்கும். இந்தக் கொண்டாட்டங்களின் ஹைலைட்டே மாநில அரசுகளின் சார்பில் இந்த கண்கவர் அணிவகுப்புகளில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் தான்.

இந்த ஊர்திகளுக்கான அனுமதியும் நிராகாரிப்பும்…
இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக, மத்திய அரசின் முக்கியமான துறை மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு பல விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பிறகு அவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் குடியரசு தின கொண்டாட்டங்களை கவனிக்கும் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் மூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அந்த விண்ணப்பத்தில் ஊர்திகளில் பயன்படுத்தப்படவுள்ள தீம், கலை வடிவம், கலாசாரம், வண்ணப்படங்கள் , இசை, வடிவமைப்பு, நடன அமைப்பு, ஊர்திகளின் அம்சம், presentation, பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் விவரம் அமையும். அவற்றை அடிப்படையாகக் கொண்டே அவை தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த தேர்வுப் பணிக்கென பல கட்டங்களில் போட்டிகள் இருக்கும். அந்தவகையில் மூன்று முறைக்கும் மேல் சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் மத்திய அரசின் துறைகளின் அதிகாரிகளை நிபுணர்குழு குழுவாக சந்தித்து பேசும். அவற்றின் அடிப்படையிலேயே பட்டியல் இறுதி செய்யப்படும். அதைத் தொடர்ந்து அணிவகுப்பில் இடம்பெற இறுதி செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் யாவும், மத்திய அமைச்சக துறை மற்றும் மாநில அரசின் அதிகாரிகள் மத்திய பாதுகாப்புத் துறை கொடுக்கக்கூடிய இடத்தில் தங்களின் வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.

இவை அனைத்துமே நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயம் என்பதால், தயாரிப்பு நடக்கும் இடங்களில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீவிரமான சோதனைகளுக்கு பிறகே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாகனங்கள் தயாராகும் முறை, அதில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் உள்ளிட்ட அனைத்துமே மிக ரகசியமாகவே வைக்கப்படும். பிறகு அணிவகுப்பு வாகனங்கள் தயாராகி முடித்தவுடன் குடியரசு தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை இறுதி செய்து ஊடகங்களை அழைத்து மாடல்களை காண்பிப்பார்கள்.

பிறகு அவை முழுமையாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அதற்கு மேற்கொண்டு எந்த விதமான மாற்றங்களை செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. குடியரசு தின அணிவகுப்புகள் நிறைவடைந்தவுடன் அவை டெல்லியிலுள்ள செங்கோட்டை மைதானத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

மத்திய அரசின் துறைகளைப் பொருத்தவரை அவர்கள் செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள் குறித்தோ அல்லது அவர்கள் செயல்படுத்துவதன் மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விளக்கும் வகையில் தங்களது அலங்கார ஊர்திகளை வடிவமைத்து இருப்பார்கள். மாநில அரசுகளை பொருத்தவரை தங்களது கலாசாரம் பண்பாடு மற்றும் அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான வடிவமைப்புகளை அலங்கார ஊர்திகளில் செய்திருப்பார்கள். இந்த அணிவகுப்பு வாகனங்களில் பங்குபெறும் மத்திய அரசின் துறைகள் மற்றும் மாநில அரசின் ஊர்திகளுக்கு சிறந்தவை எவை என்ற அடிப்படையில், 3 பரிசுகள் வழங்கப்படும். கடந்த 2000ம் ஆண்டிற்கு முன்பு வரை ஒரு பரிசு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பிறகுதான் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நிராகரிப்பு அரசியல்
கடந்த ஆண்டு 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் 24 மத்திய அரசின் துறைகளும் விண்ணப்பித்திருந்த நிலையில் 22 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் துறைகளான தொழில்துறை குடிநீர் துறை பொருளாதார சேவைத்துறை தேசிய பேரிடர் மீட்பு படை, மத்திய பொதுப்பணித்துறை மத்திய கப்பல்துறை ஆகியவையும் மாநிலங்களைப் பொறுத்தவரை ஆந்திரப் பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மத்தியப் பிரதேஷம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை வெறும் 12 மாநிலங்களுக்கும் சில மத்திய அமைச்சரவை துறைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பஞ்சாப், கர்நாடகா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அனுமதியைப் பெற்று விட்ட நிலையில் அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வாகனங்கள் இறுதி கட்ட பரிசீலனையில் உள்ளன.
கடந்த ஆண்டு கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உள்ளிட்ட மாநிலங்கள் விடுபட்டுப் போய் இருந்த நிலையில் அந்த மாநில அரசுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களான அவை, வேண்டுமென்றே குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறக்கூடாது என உள்நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளதாக குற்றம் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தனர். அது இந்த ஆண்டும் தொடர்வதுபோல கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசை பொறுத்தவரை இந்த ஆண்டு அவர்களது அலங்கார ஊர்தியில் சமூகப் போராளியான ஸ்ரீநாராயணகுரு அவர்களது உருவத்தை பிரதானமானதாக வைத்து வடிவமைத்திருந்தனர். இதன் காரணமாகவே அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட நிலையில் கேரள அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்து கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திலும் அவர்களுடைய அலங்கார ஊர்தியின் சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் வடிவமைத்து இருந்த நிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது. அதேபோல அலங்கார ஊர்தியில் ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், சித்தரஞ்சன் தாஸ் பிர்சா முண்டா உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களது உருவங்கள் கொண்ட வடிவமைப்பை மேற்கொண்டிருந்தனர்.

மத்திய அரசு இதனை நிராகரித்து இருக்கக்கூடிய நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. ‘மத்திய அரசின் முடிவு கடும் வேதனை அளிக்கும் வகையில் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்களது அலங்கார ஊர்தியை நிராகரிப்பதும் மூலம் மகத்தான சுதந்திர போராட்ட வீரர்களையும் நிராகரிப்பதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தமிழகத்தைப் போலவே பிற மாநிலங்களிலும் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.