மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைப்பாதை மற்றும் கோவில் பகுதிகள் முழுவதும் துணை ராணுவ படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு அங்கு அனுமதி இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று வரை காவல் துறையினர் மட்டுமே மலைப்பாதை மற்றும் மசூதி பகுதிக்குச் சென்று பெயர் பதிவினை மேற்கொண்ட நிலையில், தற்போது ராணுவம் அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதும், அடையாளச் சான்றிதழ்களைப் பரிசோதிப்பதுபும் பொதுமக்களிடையே பேசும் பொருளாகியுள்ளது.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தீபத் தூணைக் காண அனுமதி கிடையாது என்பதால், பக்தர்கள் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மழை பெய்தாலோ அல்லது அதிக கூட்டங்கள் மலை மீது சென்றால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அப்பகுதிக்குத் தற்பொழுது வரை பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தாங்கள் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோம் என்று துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.



