கோவை மதுக்கரை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் 100 கிலோ நெய்யுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

பக்தர்களால் கொங்கு திருவண்ணாமலை என அழைக்கப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டும் கைலாய வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, மூலவர் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெய், மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொப்பரையில் ஊற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைக் காண கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநில எல்லைப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
மலை ஏறிச் சென்ற பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து மகா தீபத்தை வழிபட்டனர். மலை ஏற முடியாத பக்தர்கள் மலையடிவாரத்தில் இருந்தபடியே மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

மலை உச்சியில் மகா தீபம் ஒளிர்ந்த அந்தத் தருணத்தில், பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அரோகரா என முழக்கமிட்டு இறைவனை வழிபட்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவில் பக்தி முழக்கங்களால் களைகட்டியது.


