தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் தீபத் தூண் தீபம் ஏற்றும் பிரச்சினை காரணமாக பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலையேற அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நாளை கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மற்றும் கோவில் வளாகப் பகுதிகளில் காவல்துறை சார்பில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல வேண்டுமெனில் தங்களது ஆதார் அடையாள அட்டையைக் காண்பித்து அனுமதி பெற வேண்டும்.

அதேவேளையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலை மீது செல்ல வேண்டுமானால், தங்களது கடவுச்சீட்டை (Passport) கோவில் நிர்வாக அலுவலகத்தில் காண்பித்து, உரிய அனுமதி கடிதம் (Permission Letter) பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்பது நடைமுறையாகும்.
இந்த சூழலில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் இன்று திருப்பரங்குன்றம் மலை மீது செல்வதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அவர்களிடம் உரிய அனுமதி கடிதம் இல்லாததால், கோவில் நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று பாஸ்போர்ட்டைக் காண்பித்து அனுமதி கடிதம் பெற்று வருமாறு கூறி காவல்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பினர்.
மேலும் கார்த்திகை தீப விழாக்காலம் என்பதால் இரண்டு நாட்களுக்கு வெளிநாட்டவர்கள் மேலே செல்ல அனுமதி இல்லை எனக் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு வருமாறும் அறிவுறுத்தினர்.

கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், மலையில் எந்த இடத்தில் தீபம் ஏற்றப்படும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு அமைக்கப்படும் என்பது குறித்து ஏற்கனவே தீவிர கண்காணிப்பு நிலவி வருகிறது.
இத்தகைய பரபரப்பான சூழலில், நைஜீரிய சுற்றுலா பயணிகள் அனுமதி பெறாமல் மலை மீது செல்ல வந்ததால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதும் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


