• Wed. Nov 18th, 2026

சோத்துப்பாறை அணையை திறந்த தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தெரியாமல் திறந்த தவெகவினரை கைது செய்ய வேண்டும் என திமுக தேனி மக்களவை உறுப்பினர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை வெளியிட்டு, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, அமைச்சரோ மாவட்ட ஆட்சியரோ அணையை திறப்பது தான் வழக்கம். ஆனால் பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐய்யங்கரன் கூறினார் என தவெக வட கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ஷேக் அலி தலைமையிலான தவெக நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் தன்னிச்சையாக திறந்து விட்டுள்ளனர்.

இந்த அணையை நம்பி சுமார் 3000 ஏக்கர் பாசன விவசாயிகள் உள்ளனர், 2 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்போது திடீரென அணை திறப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முன் அறிவிப்பின்றி அணை திறக்கப்படுவதால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படக்கூடும் என்ற எண்ணம் இன்றி ரீல்ஸ் வெறியில் அணையை திறந்து விட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு திறக்க வேண்டிய அணையை அரசிற்கு தொடர்பில்லாதவர்கள் திறந்து விட்டதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. செயற்பொறியாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டாலும் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எந்த அனுமதியும் முன்னறிவிப்பும் இன்றி அணையை திறந்த தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அணையை திறக்கக் கூறிய பெரியகுளம் எம்.எல்.ஏ மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.