• Wed. Nov 18th, 2026

தேக்கம்பட்டி சிறை ஆய்வுக்குப் பிறகு உயர்மட்டக் குழு பேட்டி!

ByAjmalkhan saleemraja

Nov 18, 2026

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

கடந்த மாதம் 26-ம் தேதி இரவு, சிறையில் பாதுகாப்புப் பணியில் இருந்த 4 காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து 25-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 43 மணி நேரத் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தப்பியோடிய 17 கைதிகளும் கைது செய்யப்பட்டு பல்வேறு மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைக் கண்காணிப்பாளர் நாகேஸ்வரன் உள்ளிட்ட 9 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சிறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சங்கர் மற்றும் முன்னாள் டி.ஐ.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்தது.

அதன்படி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலைக்கு நேரில் வந்த குழுவினர், சிறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழுவின் தலைவர் முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி, சிறையில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்புத் தணிக்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் ஒரு மாதத்தில் இடைக்கால அறிக்கையும், மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சங்கர், முதற்கட்ட விசாரணையில் சிறை விதிமுறைகள் சில இடங்களில் முறையாகப் பின்பற்றப்படாததே கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சிறைக் காவலர்களுக்குப் போதிய பயிற்சி வழங்குதல், ஆயுதம் ஏந்திய காவலர்களின் பாதுகாப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் குழுவின் சார்பில் அரசிடம் முன்வைக்கப்படும் என்றார்.

அத்துடன், இந்தியாவிலேயே தமிழக சிறைகளில்தான் தரமான உணவு மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படுவதாகவும், மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் தமிழக சிறைத்துறைக்கு முதலிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து சிறைகளின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்து வரும் உயர்மட்டக் குழுவின் இந்த விசாரணை, தமிழக சிறைத்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.