தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி அலுவலகம் முன்பு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் பரிதவித்து வரும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டித்தும், உடனடியாக அவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சின்னமனூர் நகர் குழுவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி முறையாக ஒதுக்கப்படாததால், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகள் முடங்கிப் போய் அதிகாரிகளே கைவிரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
“மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்களை ஏமாற்றாதே”தமிழக அரசே, உடனே நிதி ஒதுக்கீடு செய்!” என்ற கண்டன முழக்கங்களை எழுப்பி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அம்சம் மணி, வி.தொ.ச. மாவட்ட தலைவர் சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர் சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மகாலட்சுமி, ஈஸ்வரி, முருகேசன், பாண்டியன், பால்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
