விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகளின் காரணமாக ரயில்வே கேட் மூடப்பட்டு, அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசியிலிருந்து திருத்தங்கல் வழியாக விருதுநகர் மார்க்கமாகச் சென்று வரும் பயணிகள் பேருந்துகள் அனைத்தும் திருத்தங்கல் நகருக்குள் வந்து செல்லாமல் புறவழிச்சாலை மற்றும் சுற்று வட்டச் சாலைகளில் சென்று வருகின்றன. இதனால் திருத்தங்கல் பகுதி வாசிகள் வெளியூர்களுக்கு செல்வதற்கும், வெளியூர்களிலிருந்து திருத்தங்கல் நகருக்குள் வருவதற்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுவட்டச் சாலை வரை சென்றுவர வேண்டிய நிலையுள்ளது.

இதன் காரணமாக திருத்தங்கல் நகர மக்களின் சிரமத்தைப் போக்க அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்தி அங்கிருந்து விருதுநகர் மார்க்கமாக நகர பேருந்துகளை இயக்க வலியுறுத்தி சிவகாசி சார் ஆட்சியர் முகம்மது இர்பானை நேரில் சந்தித்து திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.