தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அருகிலுள்ள விவசாயத் தோட்டத்திற்குள் பதுங்கியுள்ள அந்த கும்பலைப் பிடிக்க 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரம், பி.சி.பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒரே கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தேனியில் வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் விரட்டிச் சென்றனர்.
அப்போது அரம்பட்டி தேவன்பட்டி அருகே சென்றபோது, அவர்கள் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள விவசாயத் தோட்டத்திற்குள் பதுங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த 30-க்கும் மேற்பட்ட போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மோப்பநாய் நிலா வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களும், மர்ம கும்பலைப் பிடிக்க நடைபெற்று வரும் போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டையும் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.