சென்னையில் நீரிழிவு நோய்க்கு எதிராகவும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும், ரேலா மருத்துவமனை நடத்திய ‘நீரிழிவு நோய்க்கு எதிரான பயணம் 2026’ சைக்கிள் பேரணியில் சுமார் 500 சைக்கிள் ஆர்வலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அனைவரும் பங்கேற்கும் வகையில், இந்த பேரணி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. மான்சூன் பிரிவில் 150 கிலோ மீட்டர், சாரல் பிரிவில் 75 கிலோ மீட்டர் மற்றும் தூறல் பிரிவில் 25 கிலோ மீட்டர் தூரம் என சைக்கிள் ஆர்வலர்கள் பயணித்தனர்.
தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் துணை மேயர் திரு ஜி. காமராஜ் ஆகியோர் கொடியசைத்து இந்த பேரணியை தொடங்கி வைத்தனர்.

சென்னை சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, ‘ஆரோக்கியத்திற்கான ஒரு பயணம்; போதைப்பொருளுக்கு எதிரான ஒரு குரல்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தது.
நிகழ்வில் பேசிய மேயர் வசந்தகுமாரி, சைக்கிள் ஓட்டுதல் அனைத்து வயதினரையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சிறந்த வழி என்றும், இது போன்ற நிகழ்வுகள் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
ரேலா மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி திரு முகமது ஃபரூக் பேசுகையில், சைக்கிள் ஓட்டுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், டைப்-2 நீரிழிவு போன்ற வாழ்க்கை முறை நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும் என்று கூறினார்.

உடற்பயிற்சி, தடுப்பு மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு மூலம் ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க ரேலா மருத்துவமனை தொடர்ந்து பணியாற்றி வருகிறது.