கோவை அவினாசி சாலையில் தனியார் கருத்தரிப்பு மையம் துவக்க விழாவில் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார்..
இதில் செய்தியளர்களிடம் பேசிய அவர்,திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மதித்து செயல்பட வேண்டும் என்றும், உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் முருகப்பெருமானை வழிபட்டு கடந்த ஆறு நாட்களாக விரதம் இருந்து வந்த முருக பக்தர்கள், சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து நாளை நடைபெற உள்ள திருக்கல்யாணத்தை முன்னிட்டு தங்களது விரதத்தை நிறைவு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, அனைத்து முருக பக்தர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்துப் பேசிய அவர், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாநில அரசு பின்பற்ற வேண்டியது கடமை என்றார். நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பின்னரும், கடந்த கால திமுக அரசும் தற்போதைய அரசும் அதனை ஏற்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், இரண்டு மதங்களுக்கு இடையே தேவையற்ற பகைமையை உருவாக்கும் வகையில் அரசு செயல்படக் கூடாது என்றும், நீதிமன்றத் தீர்ப்பின்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமான விவகாரம் குறித்த கேள்விக்கு
தொடர்ந்து செஞ்சி பகுதியில் காணாமல் போன 7 வயது சிறுமி குறித்துப் பேசிய அண்ணாமலை, சிறுமி காணாமல் போய் 35 நாட்களைக் கடந்தும் இதுவரை மீட்கப்படாதது கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.

சிபிசிஐடி, காவல் கண்காணிப்பாளர், டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடும் அரசு, 35 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ள சிறுமியை மீட்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுமியைப் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.