காரைக்குடி மாஸ்டர் சதுரங்கக் கழகமும் சண்முக நாதன் பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டிகள் 2026, இன்று (நவ. 15) காலை கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டிகளைச் சண்முக நாதன் பொறியியல் கல்லூரி இயக்குனர் ம. பிச்சப்பா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். விழாவிற்கு, காரைக்குடி மாஸ்டர் சதுரங்கக் கழகத்தின் தலைவர் டாக்டர் பழனியப்பய்யன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பவுலின் சஹாய மேரி, செயலர் வெண்ணிலா, பொருளாளர் வனஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

மேலும், சிவகங்கை மாவட்ட சதுரங்கக் கழகத் தலைவர் ஆர்.என். கருப்பையா, தமிழ்நாடு மாநில சதுரங்கப் கழக இணைச் செயலாளரும் போட்டி இயக்குனருமான கண்ணன், பிரகாஷ் மணிமாறன், டாக்டர் ஏ.ஜி. பிரகாஷ் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 400 இளம் சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகுந்த ஆர்வமுடன் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். சண்முக நாதன் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் இதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதி முடிவுகள் இன்று பிற்பகலுக்கு மேல் தெரியவரும். வெற்றி பெறும் சாதனையாளர்களுக்கு சைக்கிள்கள், வெற்றிக் கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
