• Mon. Nov 16th, 2026

மதுரை பூ மார்க்கெட்டில் விண்ணைத் தொட்ட கனகாம்பரம் விலை..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2026

​மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கனகாம்பரம் கிலோ ரூ.5,000-க்கும், மதுரை மல்லி கிலோ ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
​

தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு, மதுரை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
​

இந்நிலையில், பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து வரத்து சரிந்துள்ளதாலும், சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் கார்த்திகை மாத வழிபாடுகளை முன்னிட்டு தேவை அதிகரித்துள்ளதாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
​

இன்று (நவம்பர் 15) மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்):
​கனகாம்பரம்: ரூ.5,000
மதுரை மல்லி: ரூ.1,200
​பிச்சி: ரூ.500
​அரளி: ரூ.500
​முல்லை: ரூ.400
​மரிக்கொழுந்து: ரூ.400
​பட்டன் ரோஸ்: ரூ.300
​சம்பங்கி: ரூ.250
​ரோஸ்: ரூ.200
​பன்னீர் ரோஸ்: ரூ.200
​செவ்வந்தி: ரூ.120
​கோழிக்கொண்டை: ரூ.80
​செண்டு மல்லி: ரூ.60
​தாமரை (ஒன்றுக்கு): ரூ.40
​

வழக்கத்தை விட கனகாம்பரம் மற்றும் மல்லிகைப் பூவின் விலை பல மடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்டுள்ளதால், சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும் குறைந்த அளவிலேயே பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும், இந்த விலை உயர்வு தங்களுக்கு ஓரளவு லாபத்தைத் தருவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.