திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி வேல் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவினையொட்டி மாலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்பு மாலை 6.30 மணிக்கு சுப்பிரமணியசுவாமி கோவர்தனாம்பிகையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அதேசமயம் மூலவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், பவளக் கனிவாய் பெருமாள்,
துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள்
நடைபெற்றது.

பின்னர் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் சூரனை வதம் செய்ய கோவர்தனாம்பிகையிடம் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க சுப்பிரமணிய சுவாமி சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் கோயில் ஸ்தானிகப்பட்டர் சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தின
சக்திவேலை அளித்து சிறப்பு தீபாராதனை செய்தார்.

அதன்பின் சுப்பிரமணியசுவாமி பூச்சப்பர அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சன்னதிதெருவில் உள்ள சொக்கநாதர் கோயில்முன்பு நடைபெறும்.