• Sat. Nov 14th, 2026

சின்னமனூரில் தடை செய்யப்பட்ட கேரி பைகள் விற்பனை அமோகம்..,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சின்னமனூர் பேருந்து நிலையம், கடைவீதி, சந்தை பகுதி, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், டீ கடைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், துணிக்கடைகள் என பெரும்பாலான கடைகளில் கேரி பைகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.

பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு வியாபாரிகளே இலவசமாக கேரி பைகளை வழங்கி வருகின்றனர். இதனால் தமிழக அரசின் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை சட்டம் சின்னமனூர் பகுதியில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கேரி பைகள் மக்காமல் மண்ணில் தங்கி நிலத்தடி நீர் செல்வதை தடுக்கிறது. சாக்கடைகள், வாய்க்கால்களில் அடைத்து கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. குப்பையோடு சேர்ந்து பைகளை எரிக்கும்போது நச்சு புகை வெளியாகி சுவாச நோய் ஏற்படுகிறது. சின்னமனூரை சுற்றியுள்ள வயல்வெளிகளிலும் பிளாஸ்டிக் பைகள் குவிந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடைகளில் கேரி பைகள் எளிதாக கிடைப்பதால் தான் பயன்பாடு அதிகரிக்கிறது. முதலில் மொத்த விற்பனை செய்யும் இடங்களை கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரிகள் அவ்வப்போது மட்டும் சோதனை செய்வதால் பயன் இல்லை. தொடர் கண்காணிப்பு வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தேனி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேனி, ஆணையர், சின்னமனூர் நகராட்சி, வட்டாட்சியர், உத்தமபாளையம், நகர சுகாதார அலுவலர், சின்னமனூர் நகராட்சி, உணவு பாதுகாப்பு அலுவலர், ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடைவீதி, சந்தை பகுதிகளில் வாரத்தில் 2 முறையாவது திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பைகளை பறிமுதல் செய்து மொத்தமாக விற்கும் குடோன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சப்பை, துணிப்பை, காகித பை பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு 2019-ம் ஆண்டு முதல் ஒரு முறை பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதில் கேரி பைகளும் அடங்கும். சட்டம் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது, களத்தில் அமலாக வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.