• Sat. Nov 14th, 2026

பெண் யூடியூபரின் வீடியோக்களைத் திருடி ஆபாச அவதூறு & கொலை மிரட்டல்..,

BySeenu

Nov 14, 2026

​ கோவையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் மற்றும் யூடியூபரின் வீடியோக்களை அனுமதியின்றித் திருடி, சமூக வலைதளங்களில் ஆபாச அவதூறு பரப்பி மிரட்டல் விடுத்த வழக்கில், தமிழ்நாடு முழுவதும் 16 வழக்குகளில் தலைமறைவாக இருந்த திருச்செந்தூரைச் சேர்ந்த யூடியூபர் மணிகண்டனை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஊட்டியில் வைத்து அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

கோவை, சிவானந்தா காலனி, டாடாபாத் சிக்ஸ் கார்னர் பகுதியில் கடந்த ஒரு வருடமாக ‘நான் கற்றது Exclusive Store’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் கே. விக்னேஷ்வரி. இவர் ‘nan katrathu’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி, தான் தயாரிக்கும் பொருட்களின் செய்முறை மற்றும் விற்பனை விவரங்களை வீடியோக்களாகப் பதிவிட்டு வருகிறார்.

​இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24, 2026 முதல் திருச்செந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது ‘mani_history_mad’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், ‘Tiruchendur Manikandan’ என்ற யூடியூப் சேனலிலும் விக்னேஷ்வரியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றித் திருடிப் பதிவிட்டு வந்து உள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட விக்னேஷ்வரி நேற்று (நவம்பர் 13) கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது தொழில் மற்றும் விற்பனைப் பொருட்கள் குறித்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் மணிகண்டன் பரப்பி வந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார். மேலும், பெண் என்றும் பாராமல் பெண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி இழிவுபடுத்தியதோடு, “உன்னை இத்துடன் முடித்துவிடுவேன்” எனக் கொலை மிரட்டல் விடுத்துத் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார், சைபர் தடயங்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில், குற்றம் சாட்டப்பட்ட திருச்செந்தூரைச் சேர்ந்த சங்கர நாயனார் மகன் மணிகண்டன் (37) நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தலைமறைவாகப் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
​இதனை அடுத்து, காவல் உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து ஊட்டிக்குச் சென்று, அங்கு பதுங்கி இருந்த மணிகண்டனை இன்று (நவம்பர் 14) அதிரடியாகக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி மேற்கொண்ட தொடர் புலன் விசாரணையில், கைதான மணிகண்டன் மீது தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே 16 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பல வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்ததும் அம்பலமானது.

​விசாரணைக்குப் பிறகு குற்றவாளி மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் (நீதிமன்றக் காவல்) அடைக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.