உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் 750 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, கோவை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் இன்று காலை விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீரிழிவு நோய் பாதிப்பைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை, ரோட்டரி மாவட்டம் 3206, இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தின.

ராம்நகரில் தொடங்கிய வாக்கத்தான், விவேகானந்தா சாலை, ஹோட்டல் சிட்டி டவர், டாக்டர் நஞ்சப்பா சாலை வழியாகச் சென்று நேரு விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்தது. நிகழ்ச்சியை ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206-ன் ஆளுநர் ரோட்டேரியன் ஆர்.எஸ். மாருதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக 2028-2029-ம் ஆண்டுக்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் சஞ்சீவிகுமார், மாவட்ட இயக்குநரும் முன்னாள் ஏர் வைஸ் மார்ஷலுமான டாக்டர் என். விஜயகுமார், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளைத் தலைவர் டாக்டர் பி. கோசல் ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 750 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நீரிழிவு நோய் வராமல் தடுக்க உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.