தேனி மாவட்டம் சின்னமனூரில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.14.5 லட்சம் வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. பணத்தைத் திருப்பிக் கேட்ட சிவில் இன்ஜினியர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ராகுல் மற்றும் அவரது நண்பர்களிடம், அதே பகுதியைச் சேர்ந்த மாயன் என்பவர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மொத்தம் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்னைக்கு அழைத்துச் சென்று, தலைமைச் செயலகம் மற்றும் அரசுத் துறைகளின் பெயரில் போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பல மாதங்கள் கடந்தும் வேலை கிடைக்காததால், தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மாயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாயன், தங்களைத் தீர்த்துக்கட்டுவதாகக் கொலை மிரட்டல் விடுத்ததாக ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வேலைக்குச் சென்றுகொண்டிருந்த ராகுல் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும், தொடர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
அப்போது அங்கு வந்த காவலர் மற்றும் பொதுமக்கள் அவரைக் காப்பாற்றியதால் ராகுல் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிவில் இன்ஜினியர் ராகுல் கூறுகையில்,
தான் பி.இ. சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தற்போது பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், தன்னிடமும் தனது நண்பர்களிடமும் சேர்த்து ரூ.14.5 லட்சம் பெற்று போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி மாயன் ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது பணத்தை மீட்டுத் தருவதுடன், கொலை மிரட்டல் மற்றும் கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றச்சாட்டுக்குரிய நபரான சருத்துப்பட்டியைச் சேர்ந்த மாயனைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு வேலை என்ற கனவை நம்பி பணத்தை இழந்த இளைஞர்களுக்கு நீதி கிடைக்குமா? பாதிக்கப்பட்டவர்களின் பணம் மீட்கப்படுமா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.