• Thu. Nov 12th, 2026

​உரிமம் இன்றி போலி ஆவணங்களுடன் துப்பாக்கி வைத்திருந்த தனியார் செக்யூரிட்டிகள் இருவர் கைது..,

ByKalamegam Viswanathan

Nov 12, 2026

மதுரை மாநகரில் உரிய உரிமம் இன்றி, போலி உரிமங்களைப் பயன்படுத்தி துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த தனியார் பாதுகாப்பு நிறுவனக் காவலாளிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

​மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், காவல்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் (Security) சீருடையில் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருப்பதை கவனித்தனர்.
​

உடனே அருகில் சென்று அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் கைகளில் சிங்கிள் பேரல் கன் (Single Barrel Gun) மற்றும் டபுள் பேரல் கன் (Double Barrel Gun) போன்ற போர்கன் வகை துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது.

​இதுகுறித்து அவர்களிடம் கடுமையான விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது:
​1. தாமேந்திர குமார் திவாரி (வயது 41), த/பெ. சிவாஜி திவாரி – (இவரிடம் 2 சிங்கிள் பேரல் துப்பாக்கிகள் இருந்தன).
​2. அருண்குமார் சிங் (வயது 49), த/பெ. தார்கேஸ்வர் சவுத்ரி – (இவரிடம் 1 டபுள் பேரல் துப்பாக்கி இருந்தது).
​இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருவதும், தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்காக போலியான உரிமங்களை (Fake Licenses) தயாரித்து அவற்றைப் பயன்படுத்தி வருவதும் விசாரணையில் அம்பலமானது.
​

இதனையடுத்து, அவர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்த 3 துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்களை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
​இதுதொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாநகரில் போலி உரிமங்களுடன் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.