மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள தினமணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர், மதுரை பயங்கரவாதிகள் எதிர்ப்புப் படை (Anti-Terrorism Squad) தனிப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு தனது வீட்டின் ஹாலில் அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்துத் தகவலறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மோகன்தாஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணியில் திறம்படச் செயல்பட்டு துறை ரீதியான பல பாராட்டுக்களைப் பெற்றவர் மோகன்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டாலும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலர் மோகன்தாஸுக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இளம் வயது தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம், காவல்துறை வட்டாரத்திலும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.