• Sun. Nov 1st, 2026

வாய்க்காலில் குவியலாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் !

BySeenu

Nov 1, 2026

​ கோவை, குறிச்சி குளம் பகுதி தாண்டி உக்கடம் மேம்பாலம் ஏறும் வழியில் உள்ள வாய்க்காலில், பயன்படுத்தப்பட்ட மற்றும் காலாவதியான ஆயிரக் கணக்கான மருந்துகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, குறிச்சி குளத்தில் இருந்து நீர்வழிப்பாதையாகப் பிரியும் வாய்க்கால் பகுதியில், மருந்துப் பாட்டில்கள், மாத்திரை அட்டைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுக் கிடப்பதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

​சட்டவிரோதமாக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, நள்ளிரவு அல்லது விடியற்காலை வேளையில் இந்த மருத்துவக் கழிவுகள் வாய்க்காலில் கொட்டப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
​
பொதுவாக மருத்துவக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளைச் சிறப்பு மறுசுழற்சி மையங்கள் மூலமாகவே பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், செலவைக் குறைப்பதற்காகச் சில தனியார் மருந்தகங்கள் அல்லது தொழிற்சாலைகள் இதுபோன்று திறந்தவெளிக் கால்வாய்களில் மருந்துகளைக் கொட்டிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.

​வாய்க்காலில் கலந்து உள்ள இந்த வேதிப் பொருட்களால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மை அடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளதுடன், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் சூழலும் உருவாகி உள்ளது.
​
​உக்கடம் மேம்பால ஏறுதளத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.